Wednesday, April 28, 2004

ராசா ராசா ராசா பாரதிராசா

பேச ஆரம்பிச்சாலே "என் இனிய தமிழ்மக்களே"ன்னு கொரலு வுடுற பாரதிராசா திடீர்ன்னு "நான் கள்ளச்சாதிப் பய"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. பத்து நாளைக்கு முன்னே பாரதிராசாவுக்கும், தமிளுக்குச் சோறுபோடுற வைரமுத்துவுக்கும் மருதையில நடந்த பாராட்டு விளாவுல தான் இந்தச் சவுண்டு.

மொதல்ல பேச வந்த பயாஸ்கோப்புக்கு கத எளுதுற ரத்னகொமாரு "இந்தப் பெர்ய மன்ஸங்கோ இம்மா பெர்ய லெவல்லக்கீறாங்கன்னா அதுக்கு நம்ம கள்ளருங்க தான்பா மெயின் ரீசனு"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. தமிளுக்கே சோறு போடுற மீசக்கார வைரமுத்து இதுல எதோ மேட்டர்கீதுபா நம்ம நைசா மாட்டாம எஸ்கேப் ஆவணும்ன்னு "இது சாதிக்காரங்க வெளா இல்லபா, இனவிளா"ன்னு அஜீஸ் பண்ணிட்டாரு.

அப்பாலிக்கா பேசவந்த பாரதிராசா கரீட்ட "பல்லி கயினித்தொட்டில குதிக்கிற" மேரி குதிச்சிட்டாரு. "நா கள்ளச்சாதி தான்பா, எனக்கு சாதிப்பயங்கோ தான்பா வோணும்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.

கொரலு வுட்ட அண்ணாத்தே சினிமால மட்டும் தான் சாதி வாணாம் மதம் வாணாம்ன்னு க்ளாஸ் எடுக்கிறாப்ல மொதல் மருவாதியும், அலைகள் ஓய்வதில்லேயும், வேதம் புச்சுன்னும் எடுப்பாராம், ஆனா மன்ஸுக்குள்ள சாதி என்னிக்கும் சேர் போட்டு குந்திக்கின்னு கீதாம். சோக்கா கீதுபா நாயம். இவுரு சாதிக்காரங்கோன்னு சொல்றவங்கோ மட்டும் தான் இவரு படத்த பாத்தாங்களா, இவரு சாதியால தான் இவருக்கு அவார்டுல்லாம் குட்த்தாங்களா. எந்தூரு நாயம்னே தெர்லபா.

இந்த மேட்டர பட்ச்சப்போ இதுக்கு இன்னா ரீசனு இருக்கும்ன்னு குப்ஸாமி குந்திகின்னு ரோசனப் பண்ணான். இந்த மன்ஸன் நெய்வேலில வந்து அம்மாவுக்கு சோப்பு போடறதுக்காக சவுண்டு வுட்ட பார்ட்டி, இப்போ புச்சா "நா கள்ளச்சாதிடா"ன்னு சவுண்டு வுட்றாருன்னா ரீசனில்லாமலா இர்க்கும். கீதுபா கீது.

இன்னும் ரெண்டு வர்சத்துல இஸ்டேட்டு எலிக்ஸன் வர்து. நம்ம லெவலுக்கு பார்லிமெண்டுல்லாம் வேலிக்காவாதுன்னு பாரதிராசாவுக்கு தெர்யும். அத்தோட அம்மா வேற எல்லாரையும் புச்சு புச்சா புட்ச்சு எலிக்ஸன்ல நிக்க வெக்கிறாங்கோ. பாத்தாரு நம்ம பாரதிராசா, இப்போவே நம்ம பின்னால ஒரு சாதிக்கார கூட்டமே பிகிலடிக்க ரெடியாக்கீதுன்னு அம்மா காதுல போட்டு வெச்சா இஸ்டேட்டு எலிக்ஸன்ல அம்மா நம்மள கண்டுக்குவாங்கோன்னு ஒரு நெனப்புல ஓவரா சவுண்டு வுட்டுக்கீறாரு.

நயினா பாரதிராசா, நீயி நெய்வேலில "அம்மா தன்னோட சொந்த செலவுல எங்களுக்கு பஸ்ஸு குட்த்தாங்கோ, வழி செலவுக்கு பிஸ்கோத்து குட்த்தாங்கோ"ன்னு போட்டுவுட்டப்போவே அம்மா உன்னிய நம்பி ஒண்ணும் செய்யக்கூடாதுன்னு டிசைடு பண்ணிட்டாங்கோ. இப்போ நீ இன்னா சவுண்டு வுட்டாலும் சீட்டும் கெடிக்காது, ஒண்ணும் கெடிக்காது. நல்லதா நாலு படத்த குட்த்தோமா, புள்ளிய நடிகனாக்காம எதுனா ஒரு கடையகன்னிய வச்சி பாத்துக்கச் சொன்னோமான்னு இர்பா, அத்தான் உனுக்கும் நல்லது, தமிள்நாட்டுக்கும் நல்லது.

Tuesday, April 27, 2004

அ.இ.ல.தி.மு.க கச்சி தலீவர் தாடிக்காரராண்ட குப்ஸாமி பேட்டி

திங்கக்கெளம புச்சா கச்சி ஆரம்பிச்ச தாடிக்கார அண்ணாத்தே டி.ராஜேந்தராண்ட குப்ஸாமி பேட்டி எடுக்கப்போறான்பா.

குப்ஸ்: சலாம் போட்டுக்கிறேன் வாத்யாரே

டிஆர்: வாய்யா என் குப்பு
இனி என் ரேஞ்சு அப்பு
என்கிட்டே வேகாது பப்பு

குப்ஸ்: தலீவா இன்னும் எத்தினி காலத்துக்கு தான் இத்த மேரி கொரலு வுட்டுக்கின்னு இர்ப்ப. எதுனா புச்சா பேசுபா.

டிஆர்: (படா ஃபீலிங்ஸோட) என் அம்மா, தாய், என்னைப் பெத்த கடவுள் என்ன பெத்துப்போட்டப்போவே கூட பொறந்ததைய்யா இந்தப் பேச்சு, இது எனக்கு உயிர் மூச்சு.

குப்ஸ்: தோடா, இந்த டகுலு தானே நம்ம கைல வாணாங்கிறது. எம்சியாருக்கு எதிரா நம்ம தாத்தா ஒன்னிய கொம்பு சீவி வுட்டப்போ தாத்தாவ கரீட் பண்ண வேண்டி சொம்மா அடுக்கடுக்கா டயலாக்கு வுட்ட, இப்போ இன்னான்னா அத்த கூட பொறந்ததுன்னு என்னாண்ட போட்டுக்காட்றியே தலீவா, இத்து நாயமா..

டிஆர்: என் அன்பு தம்பி குப்புசாமி, நான் உங்களின் தோழன். ஏழைகளின் நண்பன். உழைப்பாளிகளின் உன்னத நண்பன்.

குப்ஸ்: செரி செரி, ஒடனே ஃபீலிங்ஸ் ஆவாதபா. பயாஸ்கோப்புல ஒண்ணோட ஃபீலிங்ஸ் பாத்து பிகிலடிச்சாங்கோன்னு எப்போ பாத்தாலும் அத்த எட்த்து வுடாதே. நான் இப்போ புச்சா ஆரம்பிச்ச கச்சிய பத்தி பேச வந்துக்கீறேன்

டிஆர்: நான் ஆரம்பிச்சிருக்கேன் புது கச்சி
இனி மத்ததெல்லாம் எனக்கு எச்சி
நீ கேள்விய கேளு மச்சி

குப்ஸ்: ஒன்னிய கரீட் பண்ணவே முடியாதுபா. கச்சி ஆரம்பிக்கசொல்ல ஒன்னோட ரசிகர் மன்ற நிர்வாகிங்க கூட பேசி இந்த முடிவ எட்த்துக்கீறே'ன்னு டயலாக்கு வுட்டியே ஆர்பா அந்த நிர்வாகிங்கோ?

டிஆர்: என் மனைவி உஷா அகில உலக டிஆர் ரசிகர் மன்ற தலைவர். எனது மூத்த மகன் சிலம்பரன் அகில உலக டிஆர் ரசிகர் மன்ற பொறுப்பாளர். எனது அன்பு மகள் இலக்கியா அகில உலக பொருளாளர். என் இளைய மகன் குறளரசன் அகில உலக செயலாளராகவும் இருக்கிறார்கள். இவங்க எல்லோருடனும் பேசியே இந்த முடிவுக்கு வந்தேன்.

குப்ஸ்: ஆகா ரசிகருங்கோ ஒரு குடும்பமா இர்க்கணும்ன்னு சொல்லுவாங்கோ, இங்கே குடும்பமே ரசிகர் மன்றமா கீது. நயினா நீ கில்லாடிபா. செரி, ஒன்னோட பெரிய புள்ள இன்னான்னா குத்து படத்துல "அஞ்சு வெரல் காட்டுனா"ன்னு கூவிக்கின்னே க்ளோஸப்புல வெரல் காட்டுது, நீ இன்னான்னா தாத்தாவ எதுத்துக்கின்னு புச்சா கச்சி ஆரம்பிச்சிக்கீற. அப்போ பெர்ய புள்ள ஒங்கூட கொரலு வுடாதா?

டிஆர்: (திரும்பவும் படா படா ஃபீலிங்ஸுடன்) அவன் அம்மா வயித்துல இருக்கும்போதே அவனுக்காக படத்துக்கு கத எழுதினேன். அவன் தொட்டில்ல தவழுறப்போவே அவன் கதாநாயகனா 20 வயசுல நடிக்க கதை எழுதினேன். இப்படி எல்லாம் பாலூட்டி சீராட்டி வளத்த புள்ள இப்போ என் படத்துல நடிக்க கால்ஷீட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.

குப்ஸ்: செரி வுடு தலீவா, எந்த வூட்டுல புள்ளிங்கோ அப்பன் பேச்சக் கேக்குதுங்கோ. கச்சில ஆர்ல்லாம் கீறாங்கோ, ஆராருக்கு இன்னா போஸ்ட்டிங்?

டிஆர்: கடந்த முறை கட்சி ஆரம்பித்தபோது அரசியல் அனுபவம் இல்லாத என் மனைவி மக்களை முக்கிய உறுப்பினர்களாக போட்டதால் என் கட்சி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதனால் இம்முறை அந்தத் தவறை செய்வதாக இல்லை.

குப்ஸ்: இன்னா தலீவா இப்டி சொல்லிட்ட. உனுக்கு அவங்கள வுட்டா கச்சில ஆர்பா ஆளுக்கீறா?

டிஆர்: இந்த டி.ராஜேந்தர் மாயவரத்திலிருந்து ரயில் ஏறி பாடிக்கொண்டே சென்னை வந்தது தனியாக தான். அவன் படங்களில் வெற்றிக்கொடி நாட்டியதும் தனியாக தான். அதனால, கட்சித்தலைவர், செயலாளர், பொருளாளர், கொ.ப.செ, கட்சி பேச்சாளர், நிர்வாகக்குழு தலைவர், கட்சி உறுப்பினர், போஸ்டர் ஒட்டுபவர் என்ற எட்டு காரியங்களையும் நானே எடுத்துச் செய்யப்போகிறேன். இந்தக் கட்சிக்கு ராஜேந்தர் ஒருவனே போதும், தனியாக நின்று ஜெயிப்பேன். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் தலைவி ஜெயலலிதா என்னை கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவருக்கு எனது ஆதரவு உண்டு.

குப்ஸ்: நைனா நீயி மெய்யாலுமே பெர்ய ஆளுபா. ரிக்ஸாவுக்கு சவாரி ஒண்ணு வெயிட்டிங்ல கீது, நா கலண்டுகிறேன்.

Monday, April 26, 2004

ஓட்டு கேக்குறாங்கப்பா

கட்சிக்காரங்களுக்கு எப்டில்லாம் ஓட்டுக் கேக்றதுன்னு ஒரு ரேஞ்சே இல்லாம பூட்ச்சுபா.

நம்ம தெலுங்கு தேச நாயுடுகாரு இண்டெர்நெட்டு, ஈமெயிலுன்னு ஓட்டுக் கேக்க ஆரம்பிச்சிட்டாரு. நாயுடுகாரு ஓட்டுக் கேக்கப் போற எடத்துலல்லாம் தெலுங்குதேசத்துக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்றாரோ இல்லியோ "மறக்காம ஈமெயிலு ஒண்ணு வெச்சிக்கோங்கோ"ன்னு சொல்றாராம். இன்னா கொடுமைன்னா அவரோட தொகுதிலக்கீற மக்கள்ஸ்க்கு ஈமெயிலு, கொசுமெயிலுல்லாம் ஒண்ணுமே தெர்யாது. நாயுடுகாருவுக்கு ஐத்ராபாத்து தான் ஆந்திரான்னு நெனப்பு.

நாயுடுகாரு ஈமெயிலு, இண்டர்நெட்டுன்னு போன நம்ம காவிக்கட்சி சொம்மா குந்திக்கின்னு இர்க்குமா. நைனா நீ இஸ்டேட்டு, நானு ஒட்டுமொத்த இந்தியாவையே கைல வெச்சிக்கீறேன், இன்னா செய்றேன் பாருன்னு கெளம்பிட்டாங்க. வூர்ல கொஞ்சநஞ்ச எடம் கெடைச்சாலும் தாமரப்பூவ வரஞ்சி வுட்டுடுறாங்களாம்.

தாமரப்பூவ எதுனா செவுத்துல வரஞ்சிவுட்டா பரவால்ல, ஆர்வக்கோளாறுல பேங்கு பணக்கட்டுல ஒட்டிக்கீற பேங்கு பேப்பருல கூட தாமரப்பூவ அடிச்சி வுட்டுட்டாங்களாம். இத்த விட பெரிய கூத்து இன்னான்னா கேரளாவிலே வூர்லக்கீற வழிகாட்டி கல்லுல்லாம் தாமரப்பூவ வரஞ்சி தள்ளிட்டாங்கோ. கேரளாவிலே இனி ஒரு பயலும் புச்சா ஒரு வூருக்குப் போனா அது இன்னா வூரு, அங்கேர்ந்து அடுத்த வூருக்கு எத்தினி கிலோமீட்டருன்னுல்லாம் தெர்ஞ்சிக்கக்கூடாது.

"அரசாங்க சொத்து நம்ம சொத்து"ன்னு சொல்றதை கரீட்டா புர்ஞ்சிக்கின்னது காவிக்கட்சி தான்பா.

நாளைக்கே நம்ம வெங்காய நாயுடு "தாமரப்பூவ நாங்க பேங்கு பணக்கட்டுல அடிச்சதுக்கும், கேரளாவிலே வழிகாட்டி கல்லுல வரஞ்சி வெச்சதுக்கும் காரணம் எங்க கட்சி சின்னங்கிறதால கெடியாதுபா. தாமரப்பூ நம்ம தேசியப்பூ, அத்த ஆரும் மறந்துடக்கூடாதுன்னு ஃபீலாயி தான் அப்டி செஞ்சோம்"ன்னு டகிலு வுட்டாலும் வுடுவாரு.

Saturday, April 24, 2004

எலக்கியம் படிக்கலாம் வாங்க

ரிக்ஸா வளிக்கிற குப்ஸாமிக்கு எலக்கியம் படிக்க ஆச வந்துடுச்சுபா. முன்னே ஒருக்கா இப்டி ஆர்வத்துல நம்ம பேட்ட தமிளுல வெண்பால்லாம் எய்திக்கீறேன். குப்ஸாமிக்கு வெண்பான்னா புட்ச்சிப் போனது இன்னா மேட்டருன்னா பாத்தா ரெண்டு பார்ட்டிங்கள மெயினா சொல்லணும்பா. மொதோ ஆளு கவிதன்னா என்க்கு கலீஜுன்னு டகிலு வுடுற பாரா. அவரு தான் "தெரிஞ்சது மட்டும்"ன்னு குமுதத்துல எய்தினப்போ சுலுவான வெண்பால்லாம் வாராவாரம் எய்துவாரு. "அட வெண்பா ஒரு குண்சாத்தான் கீதுபா"ன்னு நெனைக்க வெச்சவரு அவரு தான்.

அடுத்தது நம்ம குருஜி அரியண்ணாத்தே. அண்ணாத்தே பத்தி கோபக்கார வாத்யாரு, அத்து இத்துன்னால்லாம் சொல்றவங்கோ கீறாங்கோ. மெய்யாலுமே அப்டில்லாம் இல்லபா. சின்னச் சின்ன மிஸ்டேக்குல்லாம் பண்ணிட்டு "அண்ணாத்தே இது கரீட்டா ராங்கா"ன்னு கேட்டா, மன்ஸன் இன்னா பிஸியா இர்ந்தாலும் செரி "அப்டி வரக்கூடாது கண்ணா, இத்தான் கரீட்டு"ன்னு சொல்லி, அதுக்கு ரெண்டு மூணு சாம்பிளும் எட்த்து வுடுவாரு. இன்னிய தேதில நெறியா சின்னப்பசங்களுக்கு வெண்பா எளுதணும், மரபுன்னா இன்னான்னு கத்துக்கணும்ன்னு ஒரு ரேஞ்சிலே சுத்திக்கின்னுக்கீறாங்கன்னா அதுக்கு அண்ணாத்தே ஒரு மெயின் பார்ட்டி.

செரி குப்ஸாமி, அத்தான் அல்லாருக்கும் தெர்ஞ்ச மேட்டராச்சே இப்போ இன்னா சொல்ல வரேன்னு கேக்றிங்களா. நம்ம அரியண்ணாத்தே மதுரபாரதியாரோட சேந்து ஒரு குளு ஆரம்பிச்சிக்கீறாரு. பேரு "மரபெலக்கியம்".

"கவித எய்தணும்ன்னா இந்த மேரி மரபெல்லாம் கத்துக்கணும், எனக்கு இன்னாத்துக்கு"ன்னு கேக்காதிங்கோபா. எதுனா ஒரு மேட்டர ஆர்ன்னா கத்துக்குட்க்க ரெடியாக்கீறாங்கோன்னா அத்த கத்துக்கிறது நல்லது. இல்லாங்காட்டி கத்துக்குட்க்க ஆளு இல்லாத நேரத்துல ஃபீலாவணும்.

கத்துக்குட்க்கிற எடத்துல உள்ள பூந்து சவுண்டு வுடணும்ன்னு இல்ல, கத்துக்கின்ன அடுத்த நாளே மரபுக்கவித எய்தணும்ன்னு இல்ல. ஒரு ஓரமா குந்திக்கின்னு இன்னா தான்பா நடக்குது இங்கேன்னு வேடிக்கப் பாக்கலாம். இன்னிக்கு இல்லாங்காட்டி என்னிக்காவது ஒரு நாளு "அட இத்தெல்லாம் பட்ச்சது நல்லதா பூட்ச்சுபா"ன்னு சொல்லுவோம்.

"மரபெலக்கியம்" பக்கமா ஒரு சவாரி வுட்டப்போ ஒரு மேட்டரு மன்ஸுல பட்டுச்சு. குளு கலரெல்லாம் "சேப்பு கலரு ஜிங்குச்சா, மஞ்சா கலரு ஜிங்குச்சா"ன்னு கண்ணுல அடிக்கிற கலரா போட்டுக்கிறாங்கோ, அத்த கொஞ்சம் சரி பண்ணா ஜூப்பரா இர்க்கும்.

Wednesday, April 21, 2004

ஊனம் எல்லாம் ஊனமில்லிங்கோ

இன்னிக்கு குப்ஸாமி மன்ஸு ரொம்ப ஃபீலாகி எய்துறான்பா. நேத்திக்கு நம்ம பகுத்தறிவு பகலவரோட பயாஸ்கோப்பு பொட்டில நூஸ் காட்னாங்கோ. கடேசியா "வேடிக்கை வேட்பாளர்கள்'ன்னு ஒண்ணு காட்னோங்க.

மொதோ ஒருத்தரு காட்னாங்கோ, அவரு எதோ ஆர்வக்கோளாறுல எலிக்ஸன்ல நிக்கிற பார்ட்டி. கூட நிண்ணு கையெளுத்து போட பத்து பேரு கூட இல்லாத ஆளு. இவர வேடிக்கை வேட்பாளர்ன்னு சொன்னாங்கோ, இத்த லூஸ்ல வுடலாம்.

அடுத்ததா ஒராளு கின்னஸ்ல பேரெடுக்கணும்ன்னே எலிக்ஸன்ல நிக்கிற பார்ட்டி. பொண்டாட்டி தாலிய கூட அடவு வெச்சி எலிக்ஸன்ல நிக்கிறாரு. இவரல்லாம் பாத்த அய்வுலாமா சிரிக்கலாமான்னு கூட தெர்ல. இவர வேடிக்க வேட்பாளருன்னு காட்னாங்கோ, இத்தையும் லூஸ்ல வுடலாம்.

ஆனா, கட்ஸியா காட்னது தான்பா மன்ஸுக்கு ஃபீலிங்கா கீது. ரெண்டு காலும் ஊனமான மன்ஸன் எலிக்ஸன்ல நிக்கக்கூடாதுன்னு எதுனா சட்டம் கீதா. ஒரு எள வயசு, நல்லா பட்ச மன்ஸன் (சட்டம் படிக்கிறாரு) ஆனா ரெண்டு காலும் ஊனமானவரு எலிக்ஸன்ல நிக்க ஆசப்பட்டு பதிவு பண்ணிக்கீறாரு.

எலிக்ஸன்ல ஜெயிச்சா "ஊனமுற்றவங்களுக்கு வேலைவாய்ப்பை பெறுக்குவேன்"ன்னு சொல்லிக்கீறாரு. நெறியா ஊனமுற்றவங்கோ அவருக்கு பாராட்டுல்லாம் சொல்றாங்கோ. ஆனா அவரு சுயேச்சையா நிக்கிற காரணத்தால அவரையும் "வேடிக்க வேட்பாளரு"ன்னு கட்டம் கட்றாங்கோ நூஸ் பார்ட்டிங்கோ.

ரெண்டு காலும் இல்லாங்காட்டி பாராளுமன்றதுக்கு போவ முடியாதா? மக்களுக்கு நல்லது செய்ய முடியாதா? நீயி அவரோட மன்ஸ பாராட்ட வாணாம், தட்டி கீள எறக்காமலாவது இர்க்கலாம்ல. ரஜினி கொரலு வுட்டா பக்கம் பக்கமா எய்துற நம்ம மக்களுங்கோ இத்தல்லாம் கண்டுக்க மாட்டேங்கிறாங்கபா. மன்ஸுல கொறை கீறவங்கோல்லாம் எலிக்ஸன்ல நிக்கிறப்போ ஒடம்புல கொறக்கீற அந்த மன்ஸன் நிண்ணா தப்பில்லேன்னு நூஸ் பார்ட்டிங்களுக்கு ஆர்னா சொல்லுங்கபா.

Monday, April 19, 2004

தீரனைய்யா இது கரீட்டா???

எலிக்ஸன் நெருக்கத்துல வர்றப்போ நம்ம விகடன் பார்ட்டிங்கோ எலிக்ஸன் ஜோக்குல்லாம் எட்த்து வுடுறாங்களோ இல்லியோ அரசியல்வாதிங்கோ சொம்மா சோக்காவே ஜோக்கு எட்த்து வுடுறாங்கபா.

மொதோ ஜோக்கு நம்ம காவி வேட்டி பார்ட்டி ராசா (பொது செயலாளராம்ல்ல) "ரஜினி அறிக்கையால் மக்கள் மனதில் மாற்றம் வந்திருக்கிறது"ன்னு சொல்லிக்கீறாரு. நானும் அத்தான்பா சொல்றேன். சூப்புரு கொரலு வுட்டதும் "அட போப்பா, இனிமே நீ கொரலே வுட வாணாம். அல்லாம் எங்களுக்கு தெர்யும். நீ வுண்டு ஒண்ணோட எமயமல வுண்டுன்னு போயி குந்திக்கோ"ன்னு தான் மக்கள்ஸ் மன்ஸுல வுண்டாய்க்கீது. அத்தான ராசா நீங்க சொல்ல வர்றது?

நேத்திக்கி நட்ந்த இன்னொரு ஜோக்கு சொல்றேம்பா. மரவெட்டி கட்சில சீட்டு குட்க்கலைன்னு கோச்சிக்கின்னு போயி காவி வேட்டி கட்டிக்கின்னாரே தீரரு, நாபகம் கீதா. அவுருக்கு காவி பார்ட்டிங்களும் சீட்டு குட்க்கல, அத்து வேற மேட்டரு. அந்தத் தீரரு நேத்து காவிக்காரங்கோ கட்டடத்துல குந்திக்கின்னு "நா பெரிய மரவெட்டியோட ஊளலைல்லாம் வெளில கொணாரப் போறேன்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.

நைனா, நா ஒண்ணு கேட்டா கோச்சுக்கக்கூடாதுபா. நீ எத்தினி காலமா அந்த மரவெட்டி கூட குந்திக்கின்னு ஒரே தட்டுல சோறு துண்ணு ஒரே குவாட்டர கட்டிங் வுட்டுக்கின்னு இர்ந்த. அப்போல்லாம் மரவெட்டி செய்த ஊளலு கண்ணுக்கு தெர்யலையா? அவரு புள்ளிங்கோ, கொயிந்த, குட்டிக்குல்லாம் சொத்து சேத்தாருன்னு கண்ணுக்கு தெர்யலையா? வூருல வெட்டுன மரத்துக்கெல்லாம் சேத்து வச்சி தைலாபொரத்துல மரமா வளத்து ஒரு பண்ண வச்சிக்கீறாரே, அத்தெல்லாம் மூணு நாலு வர்சமா சொம்மா குந்திக்கின்னு பாத்துக்கின்னு தான இர்ந்த.

கச்சில சீட்டு குட்க்கலைன்னதும் சொம்மா ஃபீலிங்ஸு பிச்சிக்கிச்சு போல. இப்போ வந்து "நா ஒண்ணோட ஊளலைல்லாம் வெளில கொணாரேம் பாரு"ன்னு ஃபிலிமு காட்றியே இத்து நாயமா நைனா. மன்ஸனா இர்ந்திருந்தா கச்சில குந்திக்கின்னு இர்ந்தப்போவே சொல்லிருக்கணும்பா, இப்போ வந்து கொரலு வுடாதே.

Saturday, April 17, 2004

குப்ஸாமி அய்வுறாம்பாஇன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுன்றாங்கோ, மன்ஸனோட உசிரு என்னிக்கு போவும் எப்போ போவும்ன்னு ஆருக்கும் தெர்யாதுன்னு சொல்றாங்கோ. மெய்யாலுமே அப்டி தான் போல. இன்னிக்கு காலேல வர்ற குப்ஸாமியோட கனவுல வந்து குண்ஸா ஒரு கோண ஒதட்டு சிரிப்பு சிரிச்ச அம்மிணி இப்போ உசுரோட இல்ல.

டொப்புன்னு கெலிகாப்டரு தீப்புட்ச்சிக்கின்னு டப்புன்னு மேல போயி சேந்துட்டாங்கோ. மேல பறந்துகின்னு கீறப்போவே மேல போயி சேந்துட்டாங்கோ. இந்த "மேல போறது"க்கு மட்டுந்தாம்பா விசா வாணாம், டிக்கெட்டு வாணாம், ஆரும் பாதி வளில எறக்கி வுட மாட்டாங்கோ, நேரா போயி சேர வேண்டிய எடம் தான் மேட்டரு.

"அப்டி பாக்றதெல்லாம் வாணாம்"ன்னு கனவுல வந்து பாடிக்கின்னு இர்ந்தவங்கோ உசுரோட இல்லைன்னு நென்ச்சிக்கூட பாக்க முடியலபா. குப்ஸாமி செம்ம ஃபீலிங்ஸ்ல கீறான். மெய்யாலுமே அய்க வருதுபா. அப்பாலிக்கா பாக்கலாம்.....

Thursday, April 15, 2004

தொள்ஸி தங்காச்சி, பெரபு அண்ணாத்தே சவாரிக்கு ரெடி

ஆஹா வாள்க்கைலே குப்ஸாமி மொதோ தபா செம்ம குஷியாக்கீறான்பா. முன்னே ஒருக்கா இத்தே கேள்விய வேற எடத்துல கேட்டப்போ பத்து நாளு தப்பு தப்பா அல்லாரும் பதிலு சொன்னாங்கோ. ஒர்த்தரு தேவான்னாரு, ஒருத்தரு இல்லபா காளிதாசன்னு சொன்னாரு. அல்லாருக்கும் தேவா பயாஸ்கோப்புல சொன்ன மேட்டரு நாபகம் வந்திச்சு, ஆனா மீசக்கார நண்பன அல்லாரும் மறந்துபூட்டாங்கபான்னு ஒரே ஃபீலாய்டுச்சு என்க்கு.

ஆனா இந்தத் தபா கேள்விய கேட்ட ஒடனேயே பெரபு அண்ணாத்தே கரீட்டா பதில சொல்லிப்புட்டாரு. தொள்ஸி தங்காச்சி (வய்ஸுல யக்கா) "குப்ஸாமி பதிலு இன்னாபா பதிலு, நா ஒனக்கு பாட்டையே எட்த்து வுடுறேன்"னு கரீட்டா பாட்டையும் எட்த்துவுட்டாங்கோ. ரெண்டு பேருக்கும் நெம்ப டாங்ஸுபா.

மீசக்கார தோஸ்துங்காட்டியும் எங்கக் குப்பத்துல பொறந்துருந்தா "காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்"ன்னு பாடாம "டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா"ன்னு தான் ஃபீலாய்ருப்பாரு. மிஸ்ஸாயிடுச்சுபா.

குப்ஸாமிப்ரியரு "நீ போட்டுக்கீற பாரதி படம் ஞாநிக்கு சொந்தம்"ன்னு சொன்னதால வேற படம் மாத்தியாசுபா


இன்னிக்கு குப்ஸாமி ரிக்ஸாவிலே பெரபு அண்ணாத்தேக்கும் தொள்ஸி தங்காச்சிக்கும் ஒரு சூப்புரு சவாரி.

வர்ட்டா....

Sunday, April 11, 2004

டாவு டாவு டாவுடா

அல்லாருக்கும் சலாம் போட்டுக்கிறேம்பா....

நம்ம புளாக்கு இப்போ நெறியா பேரு படிக்கிறிங்கோ, குப்ஸாமிக்கும் குஜாலாக்கீது. குப்ஸாமி ஒரு கேளுவி கேக்கப் போறேம்பா. தெர்ஞ்சவங்கோ கரீட்டா பதிலு சொல்லணும். நா ஒருதபா செலருக்கு இந்தக் கேளுவிக்கு பதிலு சொல்லிக்கீறேன், அவங்க இதுல பதிலு சொல்லக்கூடாது.

கேளுவி:

"டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா" இந்தப் பாட்ட எய்துனது ஆரு?

கரீட்டா பதிலு சொன்னா குப்ஸாமி ரிக்ஸாவுலே ஓசி சவாரி ஒண்ணு கெடிக்கும்.

வர்ட்டா.....

சென்னைத்தமிளு அகராதி

வண்க்கம்பா, அல்லாரும் கொஸப்பேட்ட நீயி பேசறது மெய்யாலுமே வெளங்கலபா, எதுனா ஒரு டிஸ்னரி போட்டுவுடுன்னு சொல்றாங்கோ. அத்தால நம்ம மக்கள்ஸ்க்கு நம்ம கைலேந்து ஒரு பீஸ் எட்த்துவுட்டுக்கீறேன்.

பிட் நோட்டீஸ்: இதுல வந்துக்கீற வார்த்தைங்கோ நெறியா இப்போ காலேஜிலே படிக்கிறதா பேர் பண்ணிக்கின்னு திரியிற பசங்க ஊஸ் பண்ற வார்த்தைங்கோ. நம்ம பேட்ட வார்த்தைங்களோட டிஸ்னரி அப்பாலிக்கா பாக்கலாம்பா...


அல்வா - ஏமாற்றுதல்

ஆத்தா - அம்மா

அபேஸ் - திருடுதல்

அல்பம் - கீழ்தரமான

அண்ணாத்தே - அண்ணன் அல்லது அண்ணனுக்கு சமமான மரியாதைக்கூறியவர்

அண்ணி - அண்ணாத்தேயுடைய ஆள்

அப்பீட்டு - தோல்விநிலை

அசத்தல் - அருமை

பஜாரி - பிடிக்காத பெண்

பந்தா, பிலிமு - அதிகப்படியான அலட்டல்

பேக்கு - முட்டாள்

சிட்டு - அழகான பெண்

டுமீல், பேளு, பீலா - பொய் சொல்லுதல்

குஜ்லி - அழகான, அலட்டலான பெண்

தில்லு - தைரியம்

தூள் - சூப்பர், அருமை

தம் - புகைப்பிடித்தல்

டாவு - காதலி(லன்)

டோரி - மாறுகண்

ஃபிகரு, ஐட்டம் - பார்வையை கவர்ந்திழுக்கும் பெண்

ஃபிரியாய்டு - தேவையில்லாததை மறந்துவிடு

கானா - சென்னையில் உடல் உழைப்பை நம்பி வாழும் மக்கள் இரவு நேரங்களில் தங்கள் மகிழ்ச்சிக்காக பாடும் ஆட்டத்துடன் கூடிய பாடல்

குரு - கூட்டத்தின் அல்லது குழுவின் தலைவன்

ஜொள்ளு - ஆண்கள்/பெண்களை பார்த்து அதிகப்படியாக மயங்கிப்போவது

ஜில்பான்ஸ், குஜால்ஸ், ஜல்ஸா - பெண்களுடன் சந்தோஷமாக கூத்தடிப்பது.

ஜூட் - தப்பி ஓடுவது

ஜோட்டு - காலில் போட்டிருக்கும் செருப்பு

ஜுஜூபி - மிக சுலபம்

ஜில்லு - மிக அழகான பெண்

காட்டான் - மிருகத்தனமானவன்

கேனை - முட்டாள்

கிக்கு, மப்பு - புத்தி தெளிவில்லாத நிலை

கலக்கல்ஸ் - அருமை

கொழை அடிக்கிறது - ஒருவரை தேவையில்லாமல் அதிகப்படியாக பாராட்டி காரியம் சாதித்துக்கொள்ள நினைத்தல்

குட்டி - அம்சமான பெண்

குள்ஸ் - குள்ளமான நண்பன்

லாடு - பெரிய மனிதன் போல தன்னை காண்பித்துக்கொள்பவர்

மச்சி - உற்ற நண்பன்

மண்டை பார்ட்டி - அதிபுத்திசாலி

மாம்ஸ் - நண்பர்கள் கூட்டத்தில் வயதில் முதிர்ந்த, அரட்டையான நண்பன்

மாவா, ஒன் ட்வெண்டி - புகையிலை, பான், பீடா

மாங்கா - முட்டாள்

நம்பிட்டேன் - நம்ப முடியவில்லை

நாட்டுக்கட்டை - அருமையான கிராமத்து பெண்

நாட்டான் - கிராமத்தான்

நாமம் - ஏமாற்றுதல்

கடலை - ஆண்/பெண் விஷயமே இல்லாமல் ஆனால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொள்வது

பட்டானி - ஆண்கள் ஆண்களிடமோ, பெண்கள் பெண்களிடமோ பேசிக்கொள்வது

பீட்டர் - பெண்கள் முன்னிலையில் உயர்தர ஆங்கிலத்தில் பேசுவதாக காட்டும் ஆண்

மேரி - ஆண்கள் இருக்கும் இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசும் பெண்.

பாடி - நல்ல உடற்கட்டுள்ள நண்பன்

நைனா - அப்பா

ஓபி - நேரத்தை செலவழிப்பது.

ஓட்டுதல் - நண்பர்களை கிண்டல் செய்வது

பக்கிரி - ரௌடித்தனம் செய்பவன்

பேட்டை - மக்கள் வசிக்கும் பகுதி

பிசாத்து - எளிதான விஷயம்

ராம்போ - ஆண்தனமான பெண்

சொங்கி - சோம்பேறி

தண்ணி - மதுவகைகள்

டின் கட்டுறது - அடி வாங்குதல் அல்லது பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளுதல்

உஷார் பக்கிரி - புத்திசாலி

ராங்கு காட்டுறது - போலியாக நடித்தல்

வெயிட்டு பிகர் - பணக்கார பெண்

Wednesday, April 07, 2004

பொறம்போக்கு

இனிமே தமிள்நாட்டுல ஒருத்தரையும் பொறம்போக்கு, கய்தே, கஸ்மாலம்ன்னு திட்ட முடியாது போலக்கீதுபா. அல்லாம் நம்ம சைதாப்பேட்ட சிங்கம், கொஸப்பேட்டையானுக்கே பேட்ட தமிளு சொல்லிக்குடுக்கிற செந்தமிள் பொலவரு கிறுக்கு சங்கரு ஒரு சாப்ட்டுவேரு வுண்டாக்கிக்கீறாராம், அதுக்கு பொறம்போக்குன்னு பேர் வெச்சிக்கீறாராம்.

மொதல்ல கொஸப்பேட்ட ரிக்ஸாக்காரங்கோ சங்கத்து சார்பா கிறுக்கு சங்கருக்கு ஒரு டாஸ்மாக்கு ஃபுல்லு குடுக்குறோம்பா.

நம்ம மச்சி வெச்சிக்கீற "பொறம்போக்கு"ங்குற பேரு செலரு சோக்காக்கீதுபான்னு சொல்றாங்கோ, செலரு "இன்னாபா நீயி, குப்ஸாமி கூட கூட்டு சேந்தாலும் சேந்த, அவன மேரியே கலீஜு பார்ட்டியா மாறிட்டபா, சாப்ட்டுவேருன்னா பேரும் சாப்ட்டா இர்க்க வாணாமா, இன்னாது பொறம்போக்குன்னு கலீஜா ஒரு பேரு"ன்னு கொரலு வுடுறாங்கோ.

என்னிய கேட்டா இந்தப் பேரு சோக்காக்கீதும்பேன். நம்ம வூரு ஆளுங்களுக்கு அல்லாமும் ஒய்ங்கா பேரு வெச்சி கையிலே குட்த்தா கண்டுக்கவே மாட்டாங்கோ, அத்தே ஒரு கலீஜு பேர வெச்சு மேட்டர வெளில வுடு, "இன்னாபா பேரு"ன்னு சவுண்டு வுடுவாங்கோ. நாலு பேரு சவுண்டு வுட்டா நாப்பது பேரு அத்து இன்னாதுன்னு பாக்க, அந்த சாப்ட்டுவேர தொறந்து பாப்பாங்கோ, அப்பாலிக்கா சாப்ட்டுவேரு தானா ஜிகுஜிகான்னு பப்புளிக்கிலே தெர்ய ஆரம்பிச்சிடும்.

மச்சி, நீ இன்னும் இதே மேரி கடலமுட்டாயி, பொறம்போக்கு, கயிதே, கஸ்மாலம், பிஸ்கோத்து இன்னும் இன்னா பேரெல்லாம் மன்ஸுல தோணுதோ அல்லாத்தையும் வெய்யிபா, நா கீறேன் ஒங்கூட தொணைக்கு.

பொறம்போக்கு வோணுங்கிறவங்கோ எட்த்துக்கலாம்பா

Friday, April 02, 2004

நீயும் நானும் தோஸ்த்துஆகா, இந்தப் படத்துல குந்திக்கின்னுக்கீற கொயிந்திங்கள பாருங்கபா. இன்னாமா சிரிக்கிதுங்கோ. இந்தச் சிரிப்ப பாத்தா என்னமோ சென்னாங்குன்னி சைசுல இருக்க சொல்லோ இர்ந்து இப்போ வர ஒரே தட்டுல சோறு துண்ணு, ஒரு குவாட்டர்ல கட்டிங்கு வுட்டு அட்ச்ச தோஸ்த்துங்க கண்க்கா கீதுல்ல.

பொட்டி தட்டுற கோஸ்டிங்கோ அல்லாரும் ஜாம்பவானுங்களா நென்ச்சிக்கின்னு கீற ரெண்டு கம்பேனிங்களோட மெயின் புள்ளிங்க தா இந்த ரெண்டு பேரும். மைக்ரோசாப்ட்டு ஸ்டீவ்வும், சன் ஸ்கட்டும்.

இன்னாபா இது, ரெண்டு பேரும் வரப்பு தகராறுல வெட்டிக்கின்னு கோர்ட்டாண்ட மீச முறுக்கிக்கின்னு நிக்கிற பங்காளிங்கோ கண்க்கா இர்ந்தாங்கோ, இப்போ இப்டி ஒண்ணா குந்திக்கின்னு கீறாங்களேன்னு நெனிக்கிறிங்களா. வெட்டிக்கின்ன பங்காளிங்கோ கூட்டு சேர்ந்துட்டாங்களாம்பா.

இவங்கோ கூட்டு சேந்த கத கேட்டா சொம்மா சோக்கா இர்க்கும்பா, அக்காங். நம்மூர்ல விசயகாந்து ஆக்ட்டு குட்த்த "கேப்டன் பெரபாகரன்" பயாஸ்கோப்ப ஒரு நாளு நம்ம பில்கேட்ஸு அண்ணாத்தே பாத்தாராம். அதுல ஒரு டையலாக்கு வரும் "எதிரிக்கு எதிரி நண்பன்"னு. அத்த கேட்டதுலேந்து நம்ம அண்ணாத்தேக்கு நைட்டு தூக்கம் புட்டுக்குச்சு.

சன் பார்ட்டிங்கள வர சொல்லி, "தோ பாரு நைனா, நீயும் நானும் இப்டியே அட்ச்சிக்கின்னு இர்ந்தா நேத்து பேஞ்ச மளைல இன்னிக்கு மொள்ச்ச காளான் மேரி கீற லினக்ஸு சொம்மா சொர்ர்ருன்னு ராக்கெட்டு கண்க்கா வளந்துடுவான். அப்பாலிக்கா நீ நென்ச்சாலும் சரி, நா நென்ச்சாலும் செரி, ஒண்ணும் பண்ண முடியாது"ன்னு டையலாக்கு வுட்டுக்கீறாரு பில்கேட்ஸு.

"மாமூ, நீ சொல்றது கரீட்டுபா. லினக்ஸு ஒனக்கும் எதிரி, எனக்கும் எதிரி. நாமல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆவணும். அப்போ தா அந்தப் பசங்கள ஒண்ணுமில்லாம செய்யமுடியும்"ன்னு பூம்பூம் மாடு கண்க்கா தலீய ஆட்டிக்கீறாரு சன்னு.

ரெண்டு பேருமா கூடி கும்மாளம் அட்ச்சு பேசினாங்கோ. மைக்ரோசாப்ட்டு "மச்சி, நா ஒனக்கு ரெண்டு பில்லியன் டாலரு துட்டு குடுக்குறேம்பா"ன்னு சொல்ல, "நீ கவலைய வுடு மச்சி, நா 3,300 பசங்க ஜோலிய காலி பண்ணிடுறேன்"னு சன்னு பார்ட்டியும் தோள்ல கை போட்டுக்குச்சு.

அட்ச்சிக்கின்னவங்கோ கூட்டு சேந்தா அல்லாருக்கும் குஜாலா தான் இர்க்கும். குப்ஸாமிக்கும் கீது. ஆனா மன்ஸுக்குள்ள ஒரு மேட்டரு மட்டும் புளுவா கெடந்து துடிக்கிதுபா. சன்னுலேந்து ஜோலிய வுட்டு தூக்குனா அந்த 3,300 பேரு ஜோலி இல்லாம நிப்பாங்களே, அவங்க குடும்பம், புள்ளக்குட்டிங்கோ கதி இன்னாவும்? அல்லாரும் குப்ஸாமி கணக்கா ரிக்ஸா வளிக்க வந்துடுவாங்களா?

Thursday, April 01, 2004

மானம் காத்த மகாராசாக்கள்நம்ம கங்குலி அண்ணாத்தே என்னிக்கி கீளே உளுந்து முதுவப் பேத்துக்கின்னாரோ அன்னிலேர்ந்து நமக்கு நல்லகாலம் சும்மா அள்ளி அள்ளி குடுக்குதுபா.

தலீவரு இல்லாத கூட்டம் ஒண்ணுமில்லாம பூடும்ன்னு தா அல்லாரும் சொல்லுவாங்கோ, நம்ம இந்தியா கிரிக்கெட்டு டீமுக்கு அத்தெல்லாம் தெர்யாது.மன்ஸு இர்ந்தா அட்ச்சி பின்னி பீறாய்ஞ்சிடுவாங்கோ. மன்ஸு இல்லாங்காட்டி தலீவரு இர்ந்தா இன்னா இல்லாங்காட்டி இன்னா "நா ஏ இஸ்டப்படி தா நயினா ஆடுவேன்"னு அடம் புட்ச்சு புட்டுக்குவாங்கோ.

இந்த தபா கொயிந்திங்களுக்கு மன்ஸு சொம்மா கொளத்துல புட்ச்ச வெராலு மீனு கணக்கா துள்ளிக்கின்னு கீது போல. அட்ச்சி தூள் கெளப்புறாங்கோ. 1954லேர்ந்து இப்போ தா மொத தடவையா நம்ம கொயிந்திங்கோ நம்ம பங்காளி நாட்டுக்காரன கெலிச்சிக்கீறாங்களாம்ல. கேக்கவே குப்ஸாமி மன்ஸு சொம்மா குஜாலாகீதுபா.

இந்த தபா கெலிச்சதுல மெயினு கொயிந்திங்க யாருன்னு பாத்தா ஒரு பெர்ய சிங்கம், ரெண்டு குட்டி சிங்கங்கள தான்பா சொல்லணும். நம்ம கும்ளே சிங்கம் எப்டி பந்து போடும்ன்னு ஆருக்கும் தெர்யாது. காலு பக்கமா குத்தி உள்ளார பந்த இளுக்கும் ன்னு நென்ச்சிக்கின்னு மட்டைய தூக்குன பந்து நேரா வந்து முட்டிக்கால்ல இடிக்கும். இத்த பாக்குற அம்பயரு "ராசா, முட்டிக்கால்ல பந்த வாங்கிக்கின்னியா, வெளில போபா"ன்னு வூட்டுக்கு அனுப்பிடுவாரு. பங்காளி நாட்டுக்காரங்கள்ல பல மக்களுக்கு இந்த டெக்கினிக்கு தெர்யாது, வந்தவன் அத்தன பேரும் முட்டிக்கால்லயே பந்த வாங்கிக்கின்னு வெளில பூட்டாங்கோ.

குட்டி சிங்கம் நம்பர் ஒண்ணு: பதான் தம்பி. சொம்மா சொல்லக்கூடாதுபா, மெய்யாலுமே நம்ம கபீலு அண்ணாத்தேக்கு பெறவு சோக்கான சிங்கம்ன்னா இந்தக் குட்டிச்சிங்கம் தான். மீச கூட இன்னும் மொளைக்க ஆரம்பிக்கல, ஆனா பங்காளிங்க அல்லாரும் நம்ம தம்பிய பாத்தாலே பேண்ட நெனைச்சிக்கின்னு போய்டுறாங்கோ. இந்த மூணு டெஸ்டு இல்ல தம்பி, இன்னும் முண்ணூறு டெஸ்ட்டுல கலக்குபா

குட்டி சிங்கம் நம்பர் ரெண்டு: சேவாக்கு. மச்சி சேவாக்குக்கு இப்போ சுக்ரதச போல. பவுலரு போடுற பந்து குத்தி மேல கெளம்புறப்போவே "நைனா என்னிய அட்ச்சிப்புடாதே"ன்னு கதறிக்கின்னே வர்த்தாம். மச்சி அந்த அடி அடிக்கிறாராம். பந்த மட்டும் அடி நைனா, அரசியல்ல உன்னிய உள்ளார இளுக்கப் பாத்தா மாட்டிக்காதபா.

கங்குலி அண்ணாத்தேக்கு மெயினா ஓ போடணும்பா. காமராசர விட பெர்ய ஆளாப்பூட்டாரு. காமராசரு "பட்த்துக்கின்னே கெலிப்பேன்"னு டையலாக்கு வுட்டு புட்டிக்கின்னாராம். ஆனா நம்ம அண்ணாத்தே அப்படி இல்லே, பட்த்துக்கின்னே ரெண்டு தபா கெலிச்சிப்புட்டாரு. அண்ணாத்தே, நீயி ஆடவே வாணாம், இப்டியே காலாகாலத்துக்கும் முதுவு, களுத்துன்னு எத்தாவது ஒண்ணு ஒட்ச்சிக்கின்னு கெட, அத்தான் ஒனக்கும் நல்லது, நம்ம கிரிக்கெட்டு கொயிந்திங்களுக்கும் நல்லது.