Saturday, April 24, 2004

எலக்கியம் படிக்கலாம் வாங்க

ரிக்ஸா வளிக்கிற குப்ஸாமிக்கு எலக்கியம் படிக்க ஆச வந்துடுச்சுபா. முன்னே ஒருக்கா இப்டி ஆர்வத்துல நம்ம பேட்ட தமிளுல வெண்பால்லாம் எய்திக்கீறேன். குப்ஸாமிக்கு வெண்பான்னா புட்ச்சிப் போனது இன்னா மேட்டருன்னா பாத்தா ரெண்டு பார்ட்டிங்கள மெயினா சொல்லணும்பா. மொதோ ஆளு கவிதன்னா என்க்கு கலீஜுன்னு டகிலு வுடுற பாரா. அவரு தான் "தெரிஞ்சது மட்டும்"ன்னு குமுதத்துல எய்தினப்போ சுலுவான வெண்பால்லாம் வாராவாரம் எய்துவாரு. "அட வெண்பா ஒரு குண்சாத்தான் கீதுபா"ன்னு நெனைக்க வெச்சவரு அவரு தான்.

அடுத்தது நம்ம குருஜி அரியண்ணாத்தே. அண்ணாத்தே பத்தி கோபக்கார வாத்யாரு, அத்து இத்துன்னால்லாம் சொல்றவங்கோ கீறாங்கோ. மெய்யாலுமே அப்டில்லாம் இல்லபா. சின்னச் சின்ன மிஸ்டேக்குல்லாம் பண்ணிட்டு "அண்ணாத்தே இது கரீட்டா ராங்கா"ன்னு கேட்டா, மன்ஸன் இன்னா பிஸியா இர்ந்தாலும் செரி "அப்டி வரக்கூடாது கண்ணா, இத்தான் கரீட்டு"ன்னு சொல்லி, அதுக்கு ரெண்டு மூணு சாம்பிளும் எட்த்து வுடுவாரு. இன்னிய தேதில நெறியா சின்னப்பசங்களுக்கு வெண்பா எளுதணும், மரபுன்னா இன்னான்னு கத்துக்கணும்ன்னு ஒரு ரேஞ்சிலே சுத்திக்கின்னுக்கீறாங்கன்னா அதுக்கு அண்ணாத்தே ஒரு மெயின் பார்ட்டி.

செரி குப்ஸாமி, அத்தான் அல்லாருக்கும் தெர்ஞ்ச மேட்டராச்சே இப்போ இன்னா சொல்ல வரேன்னு கேக்றிங்களா. நம்ம அரியண்ணாத்தே மதுரபாரதியாரோட சேந்து ஒரு குளு ஆரம்பிச்சிக்கீறாரு. பேரு "மரபெலக்கியம்".

"கவித எய்தணும்ன்னா இந்த மேரி மரபெல்லாம் கத்துக்கணும், எனக்கு இன்னாத்துக்கு"ன்னு கேக்காதிங்கோபா. எதுனா ஒரு மேட்டர ஆர்ன்னா கத்துக்குட்க்க ரெடியாக்கீறாங்கோன்னா அத்த கத்துக்கிறது நல்லது. இல்லாங்காட்டி கத்துக்குட்க்க ஆளு இல்லாத நேரத்துல ஃபீலாவணும்.

கத்துக்குட்க்கிற எடத்துல உள்ள பூந்து சவுண்டு வுடணும்ன்னு இல்ல, கத்துக்கின்ன அடுத்த நாளே மரபுக்கவித எய்தணும்ன்னு இல்ல. ஒரு ஓரமா குந்திக்கின்னு இன்னா தான்பா நடக்குது இங்கேன்னு வேடிக்கப் பாக்கலாம். இன்னிக்கு இல்லாங்காட்டி என்னிக்காவது ஒரு நாளு "அட இத்தெல்லாம் பட்ச்சது நல்லதா பூட்ச்சுபா"ன்னு சொல்லுவோம்.

"மரபெலக்கியம்" பக்கமா ஒரு சவாரி வுட்டப்போ ஒரு மேட்டரு மன்ஸுல பட்டுச்சு. குளு கலரெல்லாம் "சேப்பு கலரு ஜிங்குச்சா, மஞ்சா கலரு ஜிங்குச்சா"ன்னு கண்ணுல அடிக்கிற கலரா போட்டுக்கிறாங்கோ, அத்த கொஞ்சம் சரி பண்ணா ஜூப்பரா இர்க்கும்.

No comments: