Sunday, May 30, 2004

தம்மு

தம்மட்ச்சா கேன்ஸரு வரும். தம்மட்சா நெஞ்சுவலி வந்து அல்பாய்ஸுல பூடுவோம். தம்மடிக்கற்து ஒடம்புக்கு கெடுதலு. தெனம் தெனம் கேட்டுக்கின்னு கீறோம். ஆனா யார்ன்னா அத்த வுட்டு வெளில வராங்களா? கெடியாது. நம்மூர்ல தம்மடிக்காமலே பாதி பேருக்கு கேன்ஸரு வந்துரும். பஸ்ஸு பொக, தண்ணிலாரி பொக, ஆட்டோ பொக, இருக்குற மில்லுங்க அல்லாம் வெளில வுடுற பொக. இப்டி வர்ற அல்லா பொகையும் நம்ம வுள்ள இஸ்துக்கின்னு கீறோம். இதெல்லாம் நாமளா இஸ்டப்பட்டு இஸ்துக்கின்னுகீற பொக இல்ல. ஆனா தம்மடிக்கிறது மட்டும் நாமளா இஸ்டத்தோட இஸ்துக்கின்னு கீறோம்.

ஒரு மன்ஸன் நைட்டு தூங்க போவ சொல்லோ வாயிலே அரிசிய போட்டு வெச்சிக்கின்னு அத்த மறுநாளு காலங்காத்தால வெளில துப்புறான்னு வெய்யி, அத்த எதுனா கோளி துண்ணுச்சுன்னா அந்தக் கோளிக்கு அன்னியோட சமாதி தான். மன்ஸன் ஒடம்பே வெசம் தான். இதுல இருக்குற வெசம் போதாதுன்னு மன்ஸன் தம்மடிக்கிறது, கல்ப் அடிக்கிறதுன்னு புச்சு புச்சா வெசத்த சேத்துக்குறான். கல்ப் அட்சா அத்த அடிக்கிற மன்ஸனுக்கு மட்டும் தான் கெட்டது. ஆனா தம்மடிக்கிறது பெர்ய பேஜார் மேட்டரு. அவனையும் அடிக்கும், சுத்தி இருக்கிறவனையும் அடிக்கும். அத்த மேரி, ஒரு மன்ஸன் ஒரு நாளைக்கு பத்து தம்மு அடிக்கிறான்னு வெய்யி. அந்த பத்து தம்ம மொதோ நாளு ராத்திரி ஒரு டம்பளரு தண்ணில பத்து தம்ம வூறப்போடு. மறுநாளு அந்தத் தண்ணி குட்ச்சா ஆளு பனால். தம்மு அம்புட்டு வெசம்.

தம்மடிக்கிறது ஆம்புளைக்கு அளகு, இளுக்க இளுக்க இன்பம்ன்னு அடிக்க சொல்லோ சொல்லுவாங்கோ. ஆனா அத்த அட்ச்சா நம்ம நெஞ்சுவலி வந்து அல்பாயுசுல போறதுக்கு தியேட்டராண்ட டிக்கெட்டு எடுக்க க்யூவுல அட்ச்சிக்கின்னு நிக்கிற மேரி தான். தம்மட்ச்சா நெஞ்சுவலி, கூடவே வயுத்தெரிச்சலு, கேன்ஸரு அல்லாம் தோஸ்துங்க கணுக்கா வந்து ஒட்டிக்கும். இதுல்லாம் கூட மேட்டரே இல்ல, மேட்டருக்கே ஆப்பு வெக்கிது நம்ம தம்மு. ஆம்புளைக்கு அளகுன்னு சொல்லிக்கிற தம்மு தான் மேட்டருக்கு ஆப்பு வெக்கிது.

இன்னா நயினா, ஓவரா கலீஜ்ஜு பண்றேன்னு கேக்காதிங்கோ. தம்மடிக்கிறது கெடுதலு, அத்த தான் குப்ஸாமி சொல்ல முடியும். நிறுத்திடுபா'ன்னு சொல்ற ரைட்ஸு நம்ம கைல இல்லபா. வோணா ஒண்ணு சொல்லுவேன், அத்த மட்டும் மன்ஸுலே வெச்சிக்கோங்கோ. தம்மடிங்கோ வாணான்னு சொல்லல. அட்த்தவங்களுக்கு டிஸ்டர்பு இல்லாம அடிங்கோ. தம்மடிக்கணும்ன்னு தோணுச்சா, நேரா எங்கனா மன்ஸன் இல்லாத தூரமா போயி அட்ச்சிட்டு வந்துடுங்கோ. முக்கியமா கொய்ந்த புள்ளிங்கோ இர்க்கசொல்லோ அடிக்காதிங்கோ. ஒங்களுக்கு புட்ச்ச கொயிந்திய நீங்களே களுத்த நெரிச்சு கொல்ற மேரி தான் அது.

நாளிக்கி பொய்ல எதிர்ப்பு தெனாமாம். அந்த நல்ல தெனத்துலேந்து பத்து தம்மடிக்கிற ஆளுங்கோ எட்டா கொறச்சிக்கோங்கோ. அத்த மேரியே அடிக்கிற அல்லாரும் கொஞ்சம் கொறச்சுக்கப் பாருங்கோ. மன்ஸன் நென்ச்சா முடியாததாபா.

Thursday, May 27, 2004

வெளம்பரமா பிட்டுப்படமா???

நம்ம டிவி பொட்டில வர்ற வெளம்பரம் எல்லா இன்னாமா கீதுபா. வெளம்பரப் படம் எடுக்கிற அண்ணாத்தேங்க ஷகீலாவ வெச்சி எதுனா பிட்டு படம் எட்த்தாங்கோன்னு சொம்மா பிச்சிக்கின்னு ஓடும்.

இப்போ கொஞ்ச நாளா செவனப்புன்னு ஒரு மேட்டருக்கு வெளம்பரம் வர்தே ஆர்னா பாத்திங்களா. செவனப்பு குடிக்கற்த்துக்கு வர்ற வெளம்பரமில்ல அது, பாக்குறதுக்கு தான். வளக்கம் போல செனப்பு பொம்மய காட்றாங்கோ. அப்பாலிக்கா அந்த பொம்ம செம்மய்யா ஜொள்ளு விடுது. இன்னான்னு பாக்க சொல்லோ ஒரு யக்கா இத்துணூண்டு துணிய போட்டுக்கின்னு பீச்சாண்ட நட்ந்து வர்து. வந்து செவனப்ப எட்த்து குடிக்கிது.

குடிக்க சொல்லோ குடிக்கிற பாட்டில டைரக்டரு காட்ட மாட்டேங்கிறாரு. காமிராவ கீள கொண்டாந்துடுறாரு. பிட்டு படத்துல காட்டுற மேரியே நல்லா க்ளோஸப்புல அல்லாத்தையும் காட்ராங்கோ. குட்ச்சி முட்ச்சிட்டு அந்த யக்கா ஒரு இத்துணூண்டு மேல்துணிய எட்த்து சுத்திக்கின்னு போய்டுது. அப்போவும் டைரக்டரு சொம்மா வுடாம, பின்னாடியே காமிராவ அலைய வுட்டுக்கீறாரு.

அட்த்தது இன்னொரு வெளம்பரம். ஒரு சின்ன பொண்ணும் ஒரு ஆண்ட்டியும் கடைக்கு வராங்கோ. ஒரு வெடலப்பையன் குண்சா பின்னாடி வந்துக்கின்னு கீறான். சின்னப்பொண்ணு ஆண்ட்டிய பாத்து "இன்னிக்கி என்க்கு ஓசி சோறு"ன்னு சொல்லி சிரிக்கிது. பையனும் வந்து வழிஞ்சிக்கின்னே எதோ வழி கேக்குறான். பையன் போவ சொல்லோ சின்னப்பொண்ணு ஆண்ட்டிக்கிட்டே "எனுக்கு ஓசி சோறு கண்டிப்பா உண்டு"ன்னு சொல்லிக்கின்னே எஸ்கேப்பாவுது. பையன் இப்போ அண்ட்டி பின்னாடி வர்ற மேரி காட்றாங்கோ. ஒடனே "டொட்டோடைன்ன்ன்ன்"ன்னு ஒரு சத்தம் குட்த்து விஐபி ப்ரான்னு காட்றாங்கோ.

இவுங்களுக்கு கீற கற்பன தெறத்துக்கு வெளம்பரப்படம் எடுக்காம பிட்டு படம் எட்த்தா மெய்யாலுமே படம் வெள்ளி வெளா தான். வாள்க பாரதம்.

Tuesday, May 25, 2004

படிச்ச அப்பா அம்மாவுக்கு புள்ளியா பொறக்கணும்

எலிக்ஸன் வந்தாலும் வந்துச்சு ஒரே அரசியலா பேச வேண்டியதா பூட்ச்சிபா. இன்னா பண்றது அந்த டைமுக்கு அந்த மேட்டரு. என்னிய மேரியே நம்ம சன் டிவிக்கும் அரசியல் பேசி போரடிச்சிப் பூட்ச்சு போலக்கீது. புச்சா இப்போ பள்ளிக்கொடங்கள கைல எட்த்துக்கின்னாங்கோ. இவுங்க எந்தப் பள்ளிக்கொடம் நல்லாக்கீதுன்னு பட்ச்ச பெரிய மன்ஸங்களாண்ட கேட்டு சொல்லுவாங்களாம், அத்துல போயி துட்டு குட்த்து நம்ம பட்ச்சிக்கணுமாம்.

நேத்திக்கு மதுரைல இர்ந்து ஆரம்பிச்சாங்கோ. காட்டுன இஸ்கூலுல மொதல்ல வந்தது டிவிஎஸு. இஸ்கூல என்னமோ நல்ல இஸ்கூலு தான். ஆனா ஒரு மேட்டரு தான் இடிக்கிது. இந்த இஸ்கூல படிக்கணும்ன்னா புள்ளிங்களோட நைனாவும் ஆத்தாவும் பட்ச்சிருக்கணுமாம். அப்பனும் ஆத்தாளும் படிக்காட்டி புள்ளிங்கோ படிக்காதா? அப்பன் ஆத்தா படிக்காதவங்களா இர்ந்தா புள்ளிங்கோ அப்டியே வீணாப் போற பள்ளிக்கொடத்துல தான் படிக்கணுமா?

இது இன்னா நாயம்னே தெர்லபா. புள்ளிக்கு படிக்கிற தெறம கீதான்னு பாரு, துட்டு வாங்குற பள்ளிக்கொடமா இர்ந்தா துட்டு கெடிக்குமான்னு வோணும்ன்னாலும் பாரு. அத்த வுட்டுப்போட்டு அப்பனும் ஆத்தாளும் பட்ச்சிருந்தா தான் நீயும் படிக்க முடியும்ன்னு சொல்றது இன்னா நாயம்னே தெர்லபா. இஸ்கூலுன்னா இன்னாத்துக்கு கீது. புள்ளிங்கள நல்லா படிக்க வெச்சு, நல்ல மன்ஸங்களா வெளில அனுப்ப தானே. அப்டி இர்க்க சொல்லோ இன்னாத்துக்கு இந்த மேரில்லாம் கேக்கணும்.

குப்பைல கூட குந்துமணி கெடிக்கும், சேத்துல செந்தாமர மொளிக்கும்ன்னு இஸ்கூலுல படிக்க சொல்ல சொல்றாங்கோ. ஆனா அதே இஸ்கூலுல தான் இந்த மேரி மேட்டரும் நடக்குது. "ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே, என்னாமோ நட்க்குது மாய்ம்மாய் இர்க்குது, ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே"

Saturday, May 22, 2004

மக்கள் நலம்

வண்க்கம் மக்களா, எப்டிக்கீறிங்கோ. ஒரு வாரமா வலப்பூவாண்ட சவாரி போனது பெண்டு களண்டு போச்சுபா. குண்ஸா எதுனா வூத்திக்கின்னா தான் சரி வரும் போல.

சிங்கு தாத்தா நேத்தி சோக்கா போயி பெரதமரு சீட்டுல குந்திக்கின்னாரு. ரொம்ப நல்ல மன்ஸன். நம்ம நாடு நல்லா மேலே வர இவரு எதுனா பண்ணுவாருன்னு நம்புவோம்.

சிங்கு தாத்தா பெரதமரு ஆனது இப்போ மேட்டரே கெடியாது. நம்மூரு தாத்தா "எனுக்கு சீட்டு வாணாம் எனுக்கு சீட்டு வாணாம்"ன்னு சொல்லிக்கின்னு இர்ந்தாரு பாருங்கோ, அத்தான்பா செம்ம கலாசல் காமெடி. நம்மூர்ல கண்ணால சோறு போடுறப்போ செலரு "சோறு வோணுமா"ன்னு கேட்டா "வாணாம் வாணாம்"ன்னு பீச்சாங்கையால தள்ளுவாங்க, ஆனாக்கா சோத்துக்கையி "போடுபா போடுபா"ன்னு சிக்னலு குடுக்கும். அப்டி தான் நம்ம தாத்தா செஞ்சாரு.

டில்லிக்கு ஆதரவு கடுதாசி குட்க்கிறேன்னு கெளம்பி போயி அங்கனயே குந்திக்கின்னு இர்ந்தாரு. இன்னா மேட்டருன்னு பாத்தா தன்னோட பேராண்டிக்கு ஒரு காபினெட்டு மினிஸ்டரு வோணுங்கிறதுக்கு தான் இவ்ளோ ஆட்டமும். கூடவே அட்ட கணக்கா பேராண்டியும், மெயின் அல்லங்கை பாலுவும் ஒட்டிக்கின்னே இர்ந்தாங்கோ. தாத்தாவும் போட்ட பிளான்படி பேராண்டிக்கு காபினெட்டு வாங்கி குட்த்துட்டாரு.

தாத்தாவுக்கு கொஞ்சமும் கொறஞ்சவரு இல்ல நம்ம மரவெட்டி ஐயா. அவரும் டெல்லில போயி குந்திக்கின்னாரு. இவுரு தான் கச்சி ஆரம்பிக்க சொல்ல "நானோ என்னோட வூட்ல இர்ந்தோ ஆரும் எந்தப் பதவியும் ஏத்துக்க மாட்டோம்"ன்னு கொரலு வுட்டவராச்சே, இவுரு இன்னாத்துக்கு இப்டி சுத்திக்கின்னு இர்க்காருன்னு குப்ஸாமியும் ரொம்ப அப்பாவியா நென்ச்சிக்கின்னு இர்ந்தான். மரவெட்டி ஐயா மவன எலிக்ஸன்ல நிறுத்தாமலே காபினெட்டு வாங்கி குட்த்துப்புட்டாரு. அத்தான் ராஜ்யசபா எம்பி சீட்டு கீதுல்ல....

இத்தெல்லாம் பாக்குறப்போ நம்ம பொர்ச்சி தலீவரு ஒரு பயாஸ்கோப்புல பாடுன பாட்டு தான்பா நாபகத்துக்கு வர்து. அத்த அப்போவே நம்ம தாத்தாவ பாத்து தான் பாடி வெச்சாரு, ஆனா தாத்தா தான் இன்னிய வர மாறவே இல்ல.

பாட்டு இன்னான்னு தெர்தா????

"மக்கள்நலம் மக்கள்நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்"

Wednesday, May 19, 2004

வலப்பூ சவாரி

ஓரு வாரத்துக்கு வலப்பூவாண்ட சவாரி வந்துக்கீதுபா. அத்தால சவாரி முடிஞ்சதும் இங்கே வந்து கண்டுக்கீறேன்.

வர்ட்டா......

Friday, May 14, 2004

ஜக்குபாய் ஆட்டைக்கு மறுக்கா வராரு

தலீவரு ஜூட்டு வுட்டுக்கின்னாருக்கு நேத்து நூஸ் பாத்து ஃபீலாகி குப்ஸாமி கொரலு வுட்டுட்டான். இன்னிக்கு மசாலா டைரக்டரு "இன்னாமா கண்ணுங்களா நம்ம பொயப்புக்கே ஒல வெக்கிறிங்கோ. அத்தெல்லாம் அரசியல்ல இன்னா நடந்தாலும் நம்ம தலீவரு படத்த பொங்கலுக்கு வெளில வுடுறாரு"ன்னு பொலம்பிக்கீறாரு.

தலீவா, பாபா மேரி மன்ஸன சுண்டக்கஞ்சி குட்ச்சி சுத்திக்குன்னு இர்க்க வுடாம ஜக்குபாய சொம்மா சுர்ருன்னு ஏறுற பட்டசரக்கு மேரி குடுப்பா. சொம்மா இன்னும் எளம வூஞ்சலாடுதுன்னு நென்ச்சிக்கின்னு ஐஸ்வர்யா, கரீனான்னு கூட்டியாராம ஒன்னோட ரேஞ்சிக்கு ஏத்த மேரி எதுனா ஒரு மீனாவோ ரம்யா கிருஸ்னனையோ புட்ச்சி பட்த்துல போடுபா. இல்லாங்காட்டி சோடிய ஆக்ட்டு கொடுக்கிறங்கோ ஒன்னோட பொண்ணு மேரி தெர்யும். இத்த தலீவரு மட்டும் சொல்லலைபா, அல்லா தாத்தா, சித்தப்பா நடிகருங்களுக்கும் குப்ஸாமி சொல்லிக்கீறேன், அக்காங்.

ஜக்குபாய் ஜகா வாங்கிட்டாருபா

எலிக்ஸன்ல யாருக்கு இன்னா லாபம் கெட்ச்சுதோ இல்லியோ நம்ம சூப்புரு இஸ்டார மெர்ஸல்ல வுட்டுடிச்சி. மன்ஸன் ரொம்பவே ஃபீலாட்டாரு போலக்கீது.

ரசிகனுவோ வெட்டிக்கின்னு வாங்கடான்னா கட்டிக்கின்னு வருவாங்கோன்னு நென்ச்சி மரவெட்டி ஐயாவுக்கு எதிரா கொரலு வுட்டாரு. ரசிகனுங்கோ அல்லாரும் நல்ல மன்ஸங்க தான், தலீவரு கொரலு வுட்டா அத்த சோக்கா செஞ்சு முடிக்கிற ஆளுங்க தான். ஆனா தலீவரு ஒரு நாளிக்கு ஒரு கொரலு வுடுறாரு, தலீவரோட அல்லங்கையி புச்சு புச்சா ஆர்டரு போடுது. ஆனா தலீவரு பப்ளிக்கா எதுனா கொரலு வுட சொல்ல அடக்கி வாசிக்கிறாரு.

இத்தல்லாம் பாத்தாக்கா ரசிகனுங்கோ கொளம்பிபூட மாட்டானுங்களா. அட போ தலீவா நீயி கொரலு வுட்டுப்போட்டு எங்கனா எமயமல, அமெரிக்கான்னு கெளம்பிடுவ, அப்பாலிக்கா அடி ஒத மட்டும் நாங்க வாங்கணும்ன்னு நென்ச்சிட்டாங்க போல. எலிக்ஸன்ல கண்டுக்காம வுட்டுப்போட்டாங்கோ. தாத்தா கூட கூட்டு வச்ச அல்லாருமா கெலிச்சும்புட்டாங்கோ.

இத்த கேட்ட சூப்புரு படா ஃபீலாய்ட்டாரு. இந்த ரசிகனுங்கள நம்பி இனி படம் எறக்குனா இம்மா நாளு சம்பாரிச்சு வச்ச துட்டல்லாம் வுட்டுடுவோம்ன்னு நென்ச்சி நா இனி படம் பண்ணலபான்னு ஜகா வாங்கிக்கின்னாரு. ஜகா வாங்கின கையோட பக்கத்து இஸ்டேட்டு நாயுடுகாருவையும் பாக்கப் போறாராம். அங்க கீற திராச்ச தோட்டத்தைல்லாம் ஆருக்குனா வெல பேசிட்டு அமெரிக்காவுல ஆசிரமம் எதுனா வெச்சி குந்திக்கப் போறாரு போல. போ தலீவா போ, எங்க இர்ந்தாலும் நல்லாருபா.

Tuesday, May 11, 2004

அரோகரா ஆந்திரா

எலிக்ஸன் முடிஞ்சி ஆரு லீடிங்ல வருவாங்கோன்னு கோடு போட்டுக் காட்டுற மேரி ஆந்திரா எலிக்ஸன் ரிசல்டு வந்துடுச்சி. கைச்சின்னம் பார்ட்டிங்கோ அவங்களே எதிர்பாக்காத ரேஞ்சில கெலிச்சிப்புட்டாங்கோ. ஆனாலும் இவ்ளோ பெர்ய தர்ம அடிய நாயுடுவுக்கு தெலுகுப் பார்ட்டிங்கோ குட்த்திருக்க கூடாது.

மேட்டர் முடிஞ்சிப்போச்சு, இனி ஆவ வேண்டிய காரியத்த கவனிக்கணும்.

கைச்சின்னம் பார்ட்டிங்கோ இனியாவது அவங்களுக்குள்ள அட்ச்சிக்காம மக்களுக்கு எதுனா செய்ய நெனைக்கணும். கெட்ச்ச சான்ஸ ஊஸ் பண்ணி எவ்ளோ துட்டு சம்பாரிக்கலாம்ன்னு நெனிக்காம மக்களுக்கு எதுனா செய்யணும்.

நைனா நாயுடு, நீ கவலப்படாத நைனா. இத்த விடப் பெர்ய அடியெல்லாம் தமிள்நாட்டு தாத்தா வாங்கிக்கீறாரு. ஆனா இந்த எலிக்ஸன்ல பாத்தல்ல, ஒரு மாசம் சொம்ம பம்பரம் கணக்க சொலண்டு ஓட்டு சேகரிக்கிறாரு. தமிள்நாட்டுல காமராஜருக்கே ஆப்பு அட்ச்சாங்கோ. ஆந்திராவுல அத்த மேரில்லாம் இல்லாம குப்பம் ஆளுங்கோ ஒன்னிய கெலிக்க வெச்சாங்களே, அத்த நென்ச்சி சந்தோஷப்படுபா.

இந்த தபா பூட்ச்சின்னா இன்னா அட்த்த தபா பாத்துக்கலாம். இனிமேலாவது சினிமாக்காரங்கள நம்பாம ஒன்னிய நம்பு நைனா. ஒரு நல்ல எதிர்கச்சிக்காரன்னா எப்டி இருக்கணும்ன்னு காட்டு, அப்டி செஞ்சின்னா அட்த்த தபா சோக்க கெலிக்கலாம். ரிசல்ட்டு வந்ததும் கைச்சின்னங்காரங்களுக்கு வாள்த்து சொல்லிப்புட்டு சலாம் வெச்சி வெளில வந்தியே, மன்ஸன்பா நீயி. நல்ல எதிர்கச்சியா இர்ந்து அட்த்த தபா ஆட்சிய புடிபா. வர்ட்டா...

Sunday, May 09, 2004

அல்லாரும் மறக்காம ஓட்டு போடுங்கபா

ரெண்டு மாசமா அட்ச்ச வெயில்ல ஐஸ்வாட்டரு குடிக்காம தொண்டத்தண்ணி வத்திப்போவ நம்ம அரசியல்வாதிங்கோ கூவிக்கின்னு இர்ந்த எலிக்ஸன் ஒரு வளியா நாளைக்கு நடக்கப்போவுது. ஒவ்வொரு டிவியும் ஒரு நூஸ் வுடுது. எத்த நம்புறதுன்னு தெர்யாம மக்களும் கொயம்பிக் கெடக்குது. கருத்துக்கணிப்புன்னு சொல்லி நாட்டுல பங்குசந்தைக்கு ஆப்பு வெச்சது தான் மிச்சம். வேற ஒண்ணையும் இந்தக் கருத்துக்கணிப்பு கிளிக்கப் போறது கெடியாது.

ஒவ்வொரு தபா எலிக்ஸன் முடிஞ்சாலும் ஓட்டு பதிவான எண்ணிக்கய பாத்தா அம்பதுலேந்து அறுவது சதவிதம் தான். நைனா நம்ம இன்னா காஷ்மீர்லையும் பீகார்லேயுமா குந்திக்கின்னு கீறோம். ஓட்டு போடுறது நம்மளோட உரிம, அத்த இன்னாத்து வேஷ்ட் பண்ணணும். கரீட்டா ஓட்டக் குத்திட்டா அப்பாலிக்கா எந்த அரசியல்வாதிய வேணா கேள்வி கேக்கலாம். எவன் வந்தா எனக்கென்னன்னு நம்ம வூட்டுல குந்திக்கின்னு சண்டிவி இந்த வாரம் ஒலகத் தொலைக்காச்சில வராத இன்னும் தியேட்டருக்கே வராத பயாஸ்கோப்ப பாத்துக்கின்னு கீறோம்.

இந்தத் தபா எலிக்ஸன் திங்கக்கெளமைல வேற வந்துடுச்சு. ஒட்டுக்கா மூணு நாளு லீவு கெடிக்கும்ன்னு அம்மா வூட்டுக்கு போயிக்கீற பொண்டாட்டிய பாக்க தான் பாதிப்பேரு கெளம்பிடுறாங்கோ. நைனா பொண்டாட்டிய பாக்க வாணாம்ன்னு சொல்லல, ஓட்டப் போடாம வேஷ்ட் பண்ணாத. புச்சா ஒரு பயாஸ்கோப்பு ரிலீஸு ஆனாக்கா மணிக்கணக்கா காத்துக்கின்னு இர்ந்து டிக்கெட்டு வாங்குறோம். டாவு பீச்சாண்ட வெயிட் பண்ணுன்னு சொன்னா அதுக்காக நாலு மணிநேரம் வேணாலும் காலுவலி தெர்யாமா காத்துக்கின்னு கீறோம். ஒரு அரமணி நேரம் வரிசைல நிண்ணு ஒட்டு போட்டா நம்மூட்டு சொத்தா அளிஞ்சுடப்போவுது. அத்தால மறக்காம அல்லாரும் ஓட்டுப் போடுங்கபா.

குப்ஸாமி, வூருக்கெல்லாம் யோக்கியம் சொல்ற, நீ ஓட்டுப் போடலையான்னு கேக்காதிங்கோ, குப்ஸாமிக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயிஸு ஆவல. வர்ட்டா....

Saturday, May 08, 2004

வருது வருது வீராணம் வருது

நம்மூர்ல பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யணும்ன்னு எளுதிக்கீது போல. வங்கக்கடல்ல பொயல்சின்னம் வந்து அஞ்சு நாளு மள பொலந்து கட்டுனதுல இப்போ அல்லாரும் கொஞ்சம் குஜாலாக்கீறாங்கோ.

மளப் பெஞ்சதுல அம்மாவும் குஷி ஆயிட்டாங்க போல, "வீராணத்துல தண்ணி ஃபுல்லாக்கீது, இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைல குடிக்கத் தண்ணி இல்லேன்னு ஒர்த்தரும் கொரலு வுடாத ரேஞ்சில கொண்டாறேன்"னு சொல்லிக்கீறாங்கோ. வீராணத்துலேந்து தண்ணிக் கொண்டாரது, அத்துக்கு ஒலக பேங்கு துட்டு குட்க்கிறது அல்லாம் சர் தான் தாயி. கேக்க ஜந்தோஷமா தான் கீது.

ஆனா ஒரு மேட்டர மன்ஸுல வெச்சிக்கோங்கபா. பக்கத்து இஸ்டேட்டுப் பார்ட்டிங்கோ தண்ணி தருவாங்கோங்கிற நம்பிக்க இப்போ அல்லாருக்கும் பூட்ச்சு. ஓடுற ஆத்தை எல்லாம் தேசியமயமாக்குறதும் எலிக்ஸன் ஸ்டண்டு மேரி ஆயி பூட்ச்சு. பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யும் ஆயிட்ட நெலமைல பெய்யிற மளய கொஞ்சம் மண்ணுக்குள்ள சேர்த்து வெக்க ஆர்ன்னா முயற்சிப் பண்ணிங்கன்னா நல்லா இர்ப்பிங்கோ.

வூரு ஒலத்துல கீற ஏரி கொளமெல்லாம் தூரு வாராம அடஞ்சி கெடக்குது. அத்த அப்பப்போ தூரு வாறிக்கின்னு இர்ந்தா இப்டி அடிக்கிற மள கொஞ்சமாவது அதுல போய் நிக்கும், அல்லாங்காட்டி அவ்ளோ தண்ணியும் வீணால்ல போவும். அந்தக் காலத்துல ராசாவெல்லாம் கொளம், ஏரின்னு வெட்டி அத்து தூரடஞ்சு பூட்ச்சின்னா தூரு வாரிக்கின்னு இர்ந்தாங்கோ. நீங்கல்லாம் புச்சா ஏரி கொளம் வெட்ட வாணாம். இருக்கிறத பத்திரமா பாத்துக்கின்னு அத்துல எதுனா தண்ணிய புட்ச்சி வெக்க முடியுமான்னு பாருங்கபா. மக்களுக்கு மதமாற்றத் தடைச் சட்டத்தல்லாம் விட குடிக்கிற தண்ணி ரொம்ப முக்கியம்.

Wednesday, May 05, 2004

புது மாப்ள சாசர்

நமம் கம்பியூட்டருக்கு புச்சா ஒரு வைரஸு வந்துக்கீதாம். ஆளு படா ஷோக்கு பார்ட்டியாம். இந்தச் சாசர ஆரும் உள்ள புட்ச்சாந்து வுட வாணாமாம், தானே உள்ள பூந்து ஜில்லாத்தாங்கு ஆட்டம் போடுவாராம்.

இந்தச் சாசரு வந்த கம்பியூட்டருல பெரிய பெரிய பார்ட்டிங்க அல்லாம் அடி வாங்கிருக்காங்க போல.

சாசரப் பத்தி தெர்ஞ்சிக்கணும்ன்னா இங்கே போங்க "சாசர் வாங்கலையோ சாசர்"

Sunday, May 02, 2004

நூறு வர்ஸம் இந்த மாப்ளேயும் பொண்ணும்

மர்த்தடில குந்திகின்னு கொரலு எதிர்கொரலுன்னு வுட்டு கலக்கிக்கின்னு இர்ந்த பெரச்சனைக்கு இன்னிக்கு டும்டும்டும். இனி பார்ட்டியால காலத்துக்கும் கொரலே வுட முடியாதுன்னு தோணுது.

மச்சி பெரச்சனை இன்னேரம் கண்ணாலம் முடிஞ்சு நெக்ஸ்ட் மேட்டரு இன்னான்னு நகத்த கட்ச்சிக்கின்னு குந்தியிர்க்கும். கண்ணாலம் கட்ன மச்சியும் தங்காச்சியும் நூறு வர்ஸம் குஷியா குஜாலா இர்க்கணும்ன்னு குப்ஸாமி கடவுளாண்ட வேண்டிக்கிறான்பா.

Saturday, May 01, 2004

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே தண்ணியில்லாம திண்டாட்டம்

நேத்து ஆர்ல்லாம் சண்டிவி நூஸ் பாத்திங்கபா. நேத்திய நூஸ்ல ஒரு மறக்க முடியாத மேட்டர காட்னாங்கோ. வர்ற அஞ்சாந்தேதி டெல்லி பெர்ய தாத்தா ஓட்டுக் கேக்க வர்றாரு. தாத்தா வர்ற நேரத்துல வீராணத்துலேந்து சென்னப்பட்டணத்துக்கு தண்ணி கொண்டாந்துட்டோம்ன்னு காட்ட வேண்டி அம்மா ஒரு ஜூப்புரு ஐடியா பண்ணிக்கீறாங்கோ.

செங்கல்பட்டாண்ட லாரி லாரி கொளாய்ல தண்ணி வூத்தி அத்த அஞ்சாந்தேதி தாத்தா வர்ற நேரத்துல ஓப்பனிங் வுடப்போறாங்களாம். அஞ்சாந்தேதி வரைக்கும் அந்தக் கொளாய்ல எவ்ளோ தண்ணி வூத்துவாங்கோன்னு அம்மாவுக்கும் கார்ப்பரேஸனுக்கும் தான் வெளிச்சம்.

லாரிலேந்து தண்ணி கொளாய்ல வூத்த சொல்ல நமக்கு வயிறு எரியுதுபா. கொளாய்ல பாதி தண்ணி வெளில பாதி தண்ணின்னு ஓடுது. நூஸ்ல காட்டுறப்போவே ஒரு அம்பது லாரி நிண்ணுருக்கும். அப்பாலிக்கா எத்தன லாரியோ.

அவனவன் சென்னப்பட்டணத்துல களுவத் தண்ணியில்லாம கஸ்டப்படுறான். அம்மா இன்னான்னா தாத்தாகிட்டே சீன் காட்றதுக்கு கொளாய்ல லாரி தண்ணி வுடுறாங்கோ. கொளந்தைக்கு சோறு வூட்னதா காட்றதுக்கு அம்மாக்காரி வர்ற நேரத்திலே வேலக்காரி கொளந்த வாயில சோத்துப்பருக்கய தடவி வுட்டாளாம். அந்தக் கதயா தான் கீது நம்ம அம்மா செய்ற மேட்டரும்.