திங்கக்கெளம புச்சா கச்சி ஆரம்பிச்ச தாடிக்கார அண்ணாத்தே டி.ராஜேந்தராண்ட குப்ஸாமி பேட்டி எடுக்கப்போறான்பா.
குப்ஸ்: சலாம் போட்டுக்கிறேன் வாத்யாரே
டிஆர்: வாய்யா என் குப்பு
இனி என் ரேஞ்சு அப்பு
என்கிட்டே வேகாது பப்பு
குப்ஸ்: தலீவா இன்னும் எத்தினி காலத்துக்கு தான் இத்த மேரி கொரலு வுட்டுக்கின்னு இர்ப்ப. எதுனா புச்சா பேசுபா.
டிஆர்: (படா ஃபீலிங்ஸோட) என் அம்மா, தாய், என்னைப் பெத்த கடவுள் என்ன பெத்துப்போட்டப்போவே கூட பொறந்ததைய்யா இந்தப் பேச்சு, இது எனக்கு உயிர் மூச்சு.
குப்ஸ்: தோடா, இந்த டகுலு தானே நம்ம கைல வாணாங்கிறது. எம்சியாருக்கு எதிரா நம்ம தாத்தா ஒன்னிய கொம்பு சீவி வுட்டப்போ தாத்தாவ கரீட் பண்ண வேண்டி சொம்மா அடுக்கடுக்கா டயலாக்கு வுட்ட, இப்போ இன்னான்னா அத்த கூட பொறந்ததுன்னு என்னாண்ட போட்டுக்காட்றியே தலீவா, இத்து நாயமா..
டிஆர்: என் அன்பு தம்பி குப்புசாமி, நான் உங்களின் தோழன். ஏழைகளின் நண்பன். உழைப்பாளிகளின் உன்னத நண்பன்.
குப்ஸ்: செரி செரி, ஒடனே ஃபீலிங்ஸ் ஆவாதபா. பயாஸ்கோப்புல ஒண்ணோட ஃபீலிங்ஸ் பாத்து பிகிலடிச்சாங்கோன்னு எப்போ பாத்தாலும் அத்த எட்த்து வுடாதே. நான் இப்போ புச்சா ஆரம்பிச்ச கச்சிய பத்தி பேச வந்துக்கீறேன்
டிஆர்: நான் ஆரம்பிச்சிருக்கேன் புது கச்சி
இனி மத்ததெல்லாம் எனக்கு எச்சி
நீ கேள்விய கேளு மச்சி
குப்ஸ்: ஒன்னிய கரீட் பண்ணவே முடியாதுபா. கச்சி ஆரம்பிக்கசொல்ல ஒன்னோட ரசிகர் மன்ற நிர்வாகிங்க கூட பேசி இந்த முடிவ எட்த்துக்கீறே'ன்னு டயலாக்கு வுட்டியே ஆர்பா அந்த நிர்வாகிங்கோ?
டிஆர்: என் மனைவி உஷா அகில உலக டிஆர் ரசிகர் மன்ற தலைவர். எனது மூத்த மகன் சிலம்பரன் அகில உலக டிஆர் ரசிகர் மன்ற பொறுப்பாளர். எனது அன்பு மகள் இலக்கியா அகில உலக பொருளாளர். என் இளைய மகன் குறளரசன் அகில உலக செயலாளராகவும் இருக்கிறார்கள். இவங்க எல்லோருடனும் பேசியே இந்த முடிவுக்கு வந்தேன்.
குப்ஸ்: ஆகா ரசிகருங்கோ ஒரு குடும்பமா இர்க்கணும்ன்னு சொல்லுவாங்கோ, இங்கே குடும்பமே ரசிகர் மன்றமா கீது. நயினா நீ கில்லாடிபா. செரி, ஒன்னோட பெரிய புள்ள இன்னான்னா குத்து படத்துல "அஞ்சு வெரல் காட்டுனா"ன்னு கூவிக்கின்னே க்ளோஸப்புல வெரல் காட்டுது, நீ இன்னான்னா தாத்தாவ எதுத்துக்கின்னு புச்சா கச்சி ஆரம்பிச்சிக்கீற. அப்போ பெர்ய புள்ள ஒங்கூட கொரலு வுடாதா?
டிஆர்: (திரும்பவும் படா படா ஃபீலிங்ஸுடன்) அவன் அம்மா வயித்துல இருக்கும்போதே அவனுக்காக படத்துக்கு கத எழுதினேன். அவன் தொட்டில்ல தவழுறப்போவே அவன் கதாநாயகனா 20 வயசுல நடிக்க கதை எழுதினேன். இப்படி எல்லாம் பாலூட்டி சீராட்டி வளத்த புள்ள இப்போ என் படத்துல நடிக்க கால்ஷீட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.
குப்ஸ்: செரி வுடு தலீவா, எந்த வூட்டுல புள்ளிங்கோ அப்பன் பேச்சக் கேக்குதுங்கோ. கச்சில ஆர்ல்லாம் கீறாங்கோ, ஆராருக்கு இன்னா போஸ்ட்டிங்?
டிஆர்: கடந்த முறை கட்சி ஆரம்பித்தபோது அரசியல் அனுபவம் இல்லாத என் மனைவி மக்களை முக்கிய உறுப்பினர்களாக போட்டதால் என் கட்சி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதனால் இம்முறை அந்தத் தவறை செய்வதாக இல்லை.
குப்ஸ்: இன்னா தலீவா இப்டி சொல்லிட்ட. உனுக்கு அவங்கள வுட்டா கச்சில ஆர்பா ஆளுக்கீறா?
டிஆர்: இந்த டி.ராஜேந்தர் மாயவரத்திலிருந்து ரயில் ஏறி பாடிக்கொண்டே சென்னை வந்தது தனியாக தான். அவன் படங்களில் வெற்றிக்கொடி நாட்டியதும் தனியாக தான். அதனால, கட்சித்தலைவர், செயலாளர், பொருளாளர், கொ.ப.செ, கட்சி பேச்சாளர், நிர்வாகக்குழு தலைவர், கட்சி உறுப்பினர், போஸ்டர் ஒட்டுபவர் என்ற எட்டு காரியங்களையும் நானே எடுத்துச் செய்யப்போகிறேன். இந்தக் கட்சிக்கு ராஜேந்தர் ஒருவனே போதும், தனியாக நின்று ஜெயிப்பேன். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் தலைவி ஜெயலலிதா என்னை கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவருக்கு எனது ஆதரவு உண்டு.
குப்ஸ்: நைனா நீயி மெய்யாலுமே பெர்ய ஆளுபா. ரிக்ஸாவுக்கு சவாரி ஒண்ணு வெயிட்டிங்ல கீது, நா கலண்டுகிறேன்.
No comments:
Post a Comment