Friday, April 02, 2004

நீயும் நானும் தோஸ்த்து



ஆகா, இந்தப் படத்துல குந்திக்கின்னுக்கீற கொயிந்திங்கள பாருங்கபா. இன்னாமா சிரிக்கிதுங்கோ. இந்தச் சிரிப்ப பாத்தா என்னமோ சென்னாங்குன்னி சைசுல இருக்க சொல்லோ இர்ந்து இப்போ வர ஒரே தட்டுல சோறு துண்ணு, ஒரு குவாட்டர்ல கட்டிங்கு வுட்டு அட்ச்ச தோஸ்த்துங்க கண்க்கா கீதுல்ல.

பொட்டி தட்டுற கோஸ்டிங்கோ அல்லாரும் ஜாம்பவானுங்களா நென்ச்சிக்கின்னு கீற ரெண்டு கம்பேனிங்களோட மெயின் புள்ளிங்க தா இந்த ரெண்டு பேரும். மைக்ரோசாப்ட்டு ஸ்டீவ்வும், சன் ஸ்கட்டும்.

இன்னாபா இது, ரெண்டு பேரும் வரப்பு தகராறுல வெட்டிக்கின்னு கோர்ட்டாண்ட மீச முறுக்கிக்கின்னு நிக்கிற பங்காளிங்கோ கண்க்கா இர்ந்தாங்கோ, இப்போ இப்டி ஒண்ணா குந்திக்கின்னு கீறாங்களேன்னு நெனிக்கிறிங்களா. வெட்டிக்கின்ன பங்காளிங்கோ கூட்டு சேர்ந்துட்டாங்களாம்பா.

இவங்கோ கூட்டு சேந்த கத கேட்டா சொம்மா சோக்கா இர்க்கும்பா, அக்காங். நம்மூர்ல விசயகாந்து ஆக்ட்டு குட்த்த "கேப்டன் பெரபாகரன்" பயாஸ்கோப்ப ஒரு நாளு நம்ம பில்கேட்ஸு அண்ணாத்தே பாத்தாராம். அதுல ஒரு டையலாக்கு வரும் "எதிரிக்கு எதிரி நண்பன்"னு. அத்த கேட்டதுலேந்து நம்ம அண்ணாத்தேக்கு நைட்டு தூக்கம் புட்டுக்குச்சு.

சன் பார்ட்டிங்கள வர சொல்லி, "தோ பாரு நைனா, நீயும் நானும் இப்டியே அட்ச்சிக்கின்னு இர்ந்தா நேத்து பேஞ்ச மளைல இன்னிக்கு மொள்ச்ச காளான் மேரி கீற லினக்ஸு சொம்மா சொர்ர்ருன்னு ராக்கெட்டு கண்க்கா வளந்துடுவான். அப்பாலிக்கா நீ நென்ச்சாலும் சரி, நா நென்ச்சாலும் செரி, ஒண்ணும் பண்ண முடியாது"ன்னு டையலாக்கு வுட்டுக்கீறாரு பில்கேட்ஸு.

"மாமூ, நீ சொல்றது கரீட்டுபா. லினக்ஸு ஒனக்கும் எதிரி, எனக்கும் எதிரி. நாமல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆவணும். அப்போ தா அந்தப் பசங்கள ஒண்ணுமில்லாம செய்யமுடியும்"ன்னு பூம்பூம் மாடு கண்க்கா தலீய ஆட்டிக்கீறாரு சன்னு.

ரெண்டு பேருமா கூடி கும்மாளம் அட்ச்சு பேசினாங்கோ. மைக்ரோசாப்ட்டு "மச்சி, நா ஒனக்கு ரெண்டு பில்லியன் டாலரு துட்டு குடுக்குறேம்பா"ன்னு சொல்ல, "நீ கவலைய வுடு மச்சி, நா 3,300 பசங்க ஜோலிய காலி பண்ணிடுறேன்"னு சன்னு பார்ட்டியும் தோள்ல கை போட்டுக்குச்சு.

அட்ச்சிக்கின்னவங்கோ கூட்டு சேந்தா அல்லாருக்கும் குஜாலா தான் இர்க்கும். குப்ஸாமிக்கும் கீது. ஆனா மன்ஸுக்குள்ள ஒரு மேட்டரு மட்டும் புளுவா கெடந்து துடிக்கிதுபா. சன்னுலேந்து ஜோலிய வுட்டு தூக்குனா அந்த 3,300 பேரு ஜோலி இல்லாம நிப்பாங்களே, அவங்க குடும்பம், புள்ளக்குட்டிங்கோ கதி இன்னாவும்? அல்லாரும் குப்ஸாமி கணக்கா ரிக்ஸா வளிக்க வந்துடுவாங்களா?

No comments: