Tuesday, December 12, 2006

கவுருமெண்ட்டு சொத்து நம்ம சொத்து

தாத்தா கலீஞரு அல்லாருக்கும் அள்ளி அள்ளி குட்த்துகினே கீறாருபா. பயாஸ்கோப்பு பொட்டி குட்த்தாரு, ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்குறேன் குடுக்குறேன்னு டகால்ட்டி காட்டுறாரு, டாஸ்மாக்கு ஆளுங்களுக்கு எக்ஸ்ட்ரா துட்டு குட்த்தாரு, பயாஸ்கோப்பு பார்ட்டிங்களுக்கு தமிளுல பேரு வெச்சா டாக்ஸு வாணாம்ன்னு சொல்லிட்டாரு. இப்டி அல்லாருக்கும் குட்த்துகினே கீறப்போ கரவேட்டி பார்ட்டிங்களுக்கு மட்டும் ஒண்ணுமே குடுக்கலையேன்னு மன்ஸுக்குள்ளே ஃபீலாகி இர்ப்பாரு போலக்கீது. இப்போ அவுங்களுக்கும் குட்த்துக்கீறாரு.

இன்னா குட்த்துக்கீறாரு தெர்யிமா? கட்சிக் கூட்டம்ன்னு பேரு பண்ணிகினு மைக் செட்டு மாணிக்கமெல்லாம் இன்னா அளும்பு பண்ணாலும், எந்த கவுருமெண்ட்டு சொத்த வீணாக்குனாலும் அந்தக் கட்சி ஃபைனுல்லாம் கட்ட வாணாம். இதுக்கு அவுரு சொல்லிக்கீற ரீஜனு படா சோக்குபா. கட்சி மைக்கு செட்டு கட்டி கூட்டம் கூட்ட சொல்லோ ஆராவது வந்து பேஜார் பண்ணா அதுக்கு எப்டி அந்தக் கட்சி பொறுப்பாவும். அத்தால அந்தக் கட்சி கையிலே பைசா கேக்கக்கூடாதுன்னு சொல்லிக்கீறாரு. பெர்ய மன்ஸன் பெர்ய மன்ஸன் தான்பா. இன்னாமா சொல்லிக்கீறாரு.

இப்போ ஒரு கண்ணால மண்டபத்துல கண்ணாலம் வெக்கிறோம், எதோ கொய்ந்திங்கோ ரெண்டு மூணு சாமான ஒட்ச்சிடுது, இல்லாங்காட்டி ஆரோ ரெண்டு மூணு எவர்சிலுவரு பாத்திரத்த ஆட்டயப் போட்டுடுறாங்கோ. கண்ணால மண்டப ஓனரு வந்து நம்ம கைல "கண்ணு, இத்த நீயி செய்ல, ஆரோ கண்ணால மண்டபத்துக்கு வந்தவங்கோ செஞ்சுக்கீறாங்கோ. அத்தால இதுக்கெல்லாம் நீயி பைசா குடுக்க வாணா கண்ணு"ன்னு சொல்ற மேரி கீதுபா. கரவேட்டி கண்ணுங்களா, இனிமே நீங்க எத்த ஒட்ச்சாலும் துட்டு குடுக்க வாணாம்பா, என்சாய் பண்ணுங்கோ. வர்ட்டா......

Tuesday, November 28, 2006

சானியா மிர்ஸா பத்தாவது இடத்திற்கு முன்னேற்றம்

குப்ஸாமிக்கு டென்னிஸு புடிக்கும், அதுக்கு மொதோ ரீஜனு பீட் சாம்ப்ரஸு, அப்பாலிக்கா ஃபெடரரு. இப்போ கொஞ்ச வர்ஸமா ரொம்ப ரொம்ப புடிக்கிது. ரீஜனு கீதுபா, அல்லாம் சானியா மிர்ஸா தான். அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்துல கொஸப்பேட்ட குப்ஸாமி பேரு ஆயுளு உறுப்பினரு, அகில ஒலக செயலாளருன்னு போட்ருக்கும். அப்டி ஒரு கில்மா சானியா மேல.

சானியா ஒலக ராங்கிங்குல கொஞ்ச கொஞ்சமா டவுனாகின்னே கீதா, அத்தால இப்போ கொஞ்ச நாளா குப்ஸாமி படா ஃபீலிங்கு ஆயிட்டான். ஃபீலிங்குல இர்ந்த குப்ஸாமிக்கு பட்ட பட்டயா ஊறுகா தொட்டுக்கின்னு பத்து பாட்டிலு பட்ட சரக்க அட்ச்ச மேரி ஒரு நூஸு கெட்ச்சிக்கீது. சானியா மிர்ஸா டென்னீஸு ஆட்டக்காரங்கள்ல பத்தாவது எடத்துல கீதாம். அது எப்டிபா ஆட்டத்துல தோத்துகினே இந்தப் பொண்ணு பத்தாவது எட்த்துக்கு வந்துச்சுன்னா பாக்க சொல்லோ "அயகான டென்னிஸு ஆட்டக்காரிங்கள்ல பத்தாவது எடம்" சானியாவுக்கு கெட்ச்சிக்கீதாம்.

இத்த மேரி ஒரு லிஸ்ட்டு போட்டது சீனாக்காரனுங்கோ. சீனாக்காரனுக்கு மூளையே மூளபா. அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்து சார்பா சீனாக்காரனுங்களுக்கு ஒரு டாங்க்ஸ் பார்ட்டி வெக்கணும். வர்ட்டா..............

Thursday, September 28, 2006

அந்தர்பல்டி திருமா

அந்தர்பல்டி அவார்டு ஒரு சீசனுல மரவெட்டி மருத்துவரு கையிலே இர்ந்துச்சு. அப்பாலிக்கா அத்த கருப்புத்துண்டு பார்ட்டி எட்த்துகின்னாரு. அவரோட கொஞ்ச நாளு ரவுண்டு வுட்ட மப்புல இப்போ நம்ம திர்மா அந்தர்பல்டி அவார்டு வாங்கிக்கினாரு. சோக்கா கீது இவங்க அடிக்கிற பல்டியெல்லாம். ஒலிம்பிக்ஸுனு ஏதோ கீதாமே, அத்துல அட்ச்சா எதுனா களுத்துல மாட்டி அனுப்பிவுடுவாங்கோ.

முன்னே ஒருக்கா கலீஞரு கூட நிண்ணு ஒரு சீட்டு கெலிச்சாரு. அப்பாலிக்கா இன்னா நென்ச்சாருன்னு தெர்ல முட்டாயி வாணாம்ன்னு தூக்கிப் போடுற கொளந்த கணுக்கா அய்துகினே "எனுக்கு எம்.எல்.ஏ சீட்டு வாணாம்"ன்னு பூட்டாரு. மறுக்கா மரவெட்டி ஐயா கலீஞரு தாத்தா கையிலே சேர்ந்துக்கோபான்னு கூப்டப்போ, தாத்தா "வோணும்ன்னா உங்கிட்டே கீற சீட்டுல அவுனுக்கு ரெண்டு குடு"ன்னு சொன்னாரு. அப்போ "எச்சி சோறு எனுக்கு வாணாம்"ன்னு சோக்கா டயலாக்கு வுட்டு அம்மா கையிலே 9 சீட்டு வாங்குனாரு.

இப்போ மறுக்கா வந்து கலீஞருக்கு மஞ்சா சால்வ போத்தி "காலத்தின் கட்டாயம், நான் அங்கே அவமானப்படுத்தப்பட்டேன்"ன்னு டயலாக்கு வுடுறாரு. கலீஞரும் பெர்ய மன்ஸோட "எங்கையிலே கீற சீட்டுல வுனுக்கும் தரேன் கண்ணு"ன்னு டயலாக்கு வுடுறாரு. டயலாக்கெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா, குப்ஸாமிக்கு ஒரே ஒரு டவுட்டு. முன்னே "மரவெட்டி கையிலே கீற சீட்டுல ரெண்டு குடு"ன்னு சொன்னப்போ எச்சிலு சோறா தெர்ஞ்சது இப்போ தன்னோட கையிலேர்ந்து தாத்தா எட்த்து குடுக்கசொல்லோ "புச்சா வடிச்ச சுடுசோறா" தெர்யிதா? சோக்கா கீதுபா ஒங்க நாயமெல்லாம்.

திருமா அந்தர்பல்டி அட்ச்சாச்சு. இன்னும் மிச்சம் கீற கருப்புத்துண்டு பார்ட்டி, சித்தப்பா சரத்குமாருல்லாம் இன்னா டயலாக்கு வுடலாம்ன்னு மைண்ட மிக்ஸில அட்ச்சி ரோசனப் பண்றாங்கோ. சீக்கிரம் நீங்களும் வந்து தாய் களகத்துல சீட்டப் புடிங்கபா.

Thursday, August 31, 2006

கானா கோபால்சாமிவால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அங்கே சென்னாங்குண்ணி கூட்டமெல்லாம் ஊர்கோலம்ம்ம்ம்ம்

நன்றி: தினமலர்.காம்

Sunday, August 27, 2006

கட்டிப்புடி வைத்தியம்

உம்மா அரசரு ஒலக நாயகரு வசூல்ராசாவா வந்து கட்டிப்புடி வைத்தியம் கத்துக் குட்த்தாரே ஞாபகம் கீதாப்பா. அவுருக்கு அந்த வைத்தியத்த இஸ்கூல்ல கிளாஸ் எட்த்தவரு பிரிட்டன்ல கீற நம்மூரு வைத்தியரு பெஞ்சமின் தியோதரு போலக்கீது. இந்தக் கட்டிப்புடி வைத்தியத்த நம்மாளு செப்டம்பர் 1991லேந்து சோக்கா செஞ்சுகின்னு கீறாரு. 63 வய்ஸு ஆன பொறவு கூட கட்டிப்புடி வைத்தியத்த தலீவரு வுடல போலக்கீது, வைத்தியத்துக்கு வந்த ஒரு அம்மா கையிலே கட்டிப்புடி வைத்தியத்த காட்ட, அந்தம்மா போலீஸுக்கு பூட்ச்சி. இப்போ தாத்தா ஜெயில் கம்பி கூட கட்டிப்புடி வைத்தியம் செஞ்சுகின்னு கீறாரு.

இந்த மேட்டர நம்ம கஜேந்திரரு கையிலே போட்டு வெக்கலாம்ன்னு குப்ஸாமி நென்ச்சிக்கின்னு கீறான்பா. இன்னாத்துக்குன்னு கேக்குறிங்களா? கஜேந்திரரு கையிலே சொன்னாக்கா, அவுரு பயாஸ்கோப்புல ஒரு சீன செட் பண்ணி "நீயெல்லாம் ஒரு டாக்டராடா, கடவுளுக்கு அப்புறம் நம்ம மக்கள் காப்பாத்துவார்ன்னு நம்பி வர்றது உங்களை மாதிரி டாக்டர் கிட்டே தான். புருஷனுக்கு அப்புறம் நம்ம பொம்பளைங்க அவங்க உடம்பை வெளியிலே காட்டுறதும் உங்களை மாதிரி டாக்டர்ங்க கிட்டே தான். அப்படி நம்பி வர்றவங்களை ஏமாத்துற நீயெல்லாம் ஒரு டாக்டராடா"ன்னு டயலாக்கு வுடுவாரு. வுடுற டயலாக்குல டாக்டருங்களுக்கு ஒரு நாக்கவுட்டு குட்த்த மேரியும் இர்க்கும், மருத்துவரு ஐயாவுக்கும் சின்ன மருத்துவருக்கும் ஒரு பஞ்ச் வுட்ட மேரியும் இர்க்கும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!!!!!!!!!!!!!!!!

Saturday, July 22, 2006

பட்ஜெட் 2006

சட்டசபையிலே வாஸ்து பாத்து சீட்ட கரீட்டு பண்ணாங்களோ இல்லியோ, அத்தெல்லாம் மேட்டரே கெடியாது. இனிமே பட்ஜெட்டு படிக்கசொல்லோ கேப்டரு கஜேந்திரா இல்லாம வேற ஆரும் பட்ஜெட்ட புடுங்கி கிளிச்செறிய முடியாது. கேப்டருன்னா சொம்மா வானத்துல சொய்ய்ன்னு டைவு அட்ச்சி வந்து புடுங்கிடலாம், வேற ஆருங்காட்டி முடியுமா? பத்து அடி கேப்பு வுட்டுக்கீறாங்கோ.

இந்த தபா பட்ஜெட்டுல அல்லாரையும் சோக்கா தாஜா பண்ணிக்கீறாங்கோ. மெயினா வயித்துல துணிய கட்டிக்கின்னு கீற வெவசாயிங்கோ வயித்துல பாலு.


  • புச்சா வரி எதுவும் கெடியாது.
  • விவசாய கடனுக்கு வட்டி ஏழு பர்செண்ட்டு.
  • ரேஸன் அரிசிங்காட்டி தள்ளிகின்னு போனா குண்டர் சட்டத்துல உள்ள புட்ச்சிப் போட்டுருவாங்கோ
  • எலவச சைக்கிளு, எலவச பஸ் பாஸ் அல்லாம் அப்டி அப்டியே கீது
  • சென்னையிலேயும் கோவையிலேயும் புச்சா ரெண்டு டைடலு பார்க்கு
  • இஷ்டிரைக்கு பண்ணவங்களுக்கு இஷ்டிரைக்கு டைமுல கெடிக்க வேண்டிய துட்டு
  • தமிழ்ல சாப்ட்டுவேரு எய்துனா வரி கெடியாது (க்ருபா எய்துன பொறம்போக்குக்கு வரி உண்டாபா?)
  • பயாஸ்கோப்பு பேரு தமிளுல வெச்சா வரி கெடியாது (மருத்துவரு குஸி ஆகிடுவாரு)


அல்லாம் சோக்கா தான் கீது. ஆனா அல்லாமே அடுத்த உள்ளாச்சி எலிக்ஸன மன்ஸுல வெச்சி போட்ட மேரி கீது. அடுத்த பட்ஜெட்டுல எதுனா ஆப்பு வருமான்னு தெர்லபா.

Sunday, June 04, 2006

டையமண்டு கவிஞரின் கண்ணகி பொராணம்

சிஎம்மு தாத்தாவுக்கு நேத்து பொறந்தநாளு. "வாய்த்த வயசு கெடியாதுபா, வணங்குறேன்"ன்னு அல்லாரும் டயலாக்கு வுட்டுகின்னே காலுல வுய்ந்துருப்பாங்கோ. தாத்தா எலிக்ஸனுக்கு முன்னாடி சொன்ன மேரி அரிசி குடுக்க ஆரம்பிச்சிட்டாரு, கொஞ்ச நாளுல டிவி பொட்டியும் குடுப்பேன்னு சொல்லிக்கீறாரு. கண்ணகி செலைய கூட மருக்கா தொறந்து வெச்சிக்கீறாரு. அல்லாம் சோக்கா தான் கீது.

அல்லா மேட்டரையும் சொம்மானா பாத்துக்கின்னு இர்ந்த குப்ஸாமிக்கு கண்ணகி மேட்டருல தான் ஒரு டகால்டி கெட்ச்சிதுபா. இன்னாங்குறிங்களா? சொல்றேன் சொல்றேன். பகுத்தறிவு பாசறையிலே பாலு குட்ச்சி வளந்துபுட்டு மஞ்சத்துண்டு போட்டா மன்ஸுக்கு எதமா கீதுன்னு சொல்லிக்கின்னு கீற தாத்தா குந்திகின்னு இர்ந்த மீட்டிங்கில கவிப்பேரரசு டயமண்டு கவிஞரு ஒரே டயலாக்கா வுட்டுக்கின்னு கீறாரு.

"கண்ணகி சிலை வெறும் உலோகம் இல்லை, எங்கள் உலகம்".

ஒகே கரீட்டு.

"தலைவிரி கோலத்துடன் கண்ணகி சிலை இருப்பது சென்னை நகரத்திற்கும் தமிழகத்திற்கும் அபசகுணம் என்பதால் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது"

இதுவும் ஒகே, வெச்சுக்குவோம்.

"கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"

இது தான் கவிஞரே இடிக்கிது. எங்கேயோ இருக்குற இந்தோனேஷியாவுல பூமி குலுங்க, அதோட அதிர்ச்சி தமிள்நாடு தாண்டியும் அட்ச்சிது. கண்ணகி செலங்காட்டி அங்க இர்ந்தா அம்மிணி டிராஃபிக்கு போலீஸு கணுக்கா சுனாமிய வேற ரூட்டுக்கு டைவர்ட்டு பண்ணி வுட்டுருக்கும்ன்னு சொல்லுறது கொஞ்சம் டூ மச்சா கீது கவிஞரே. அதுவும் பகுத்தறிவு பாசறையிலே தாத்தா குட்ச்ச மிச்ச பால குட்ச்சி வளந்தவரு நீங்க. தாத்தா பக்கத்துல குந்திகின்னே இப்டி பேஸ்றிங்களே, நாயமா கீதா?

Monday, May 22, 2006

எலிக்ஸன் 2060 - ஒரு ரிக்ஸா ரவுண்டப்

இன்னா குப்ஸாமி, தேன்கூடு நடத்துன எலிக்ஸனு 2060 போட்டி தான் இருவதாம் தேதி முட்ஞ்சி போச்சே இன்னிக்கு இன்னா எய்திக்கீறேன்னு ஆரும் ஃபீலாவதிங்கபா. நானு எலிக்ஸனு 2006ல ஓட்டுக் குத்த முடியாம பூட்ச்சேன்னு படா ஃபீலிங்ஸுல கீறேன் (மாமியாரு வூட்டுல கறிசோறு துன்னப் போயிட்டேன்பா, நீயி நெனைக்கிற மாமியாரு வூடு இல்லபா, இத்து மெய்யாலுமே மாமியாரு வூடு). 2006ல ஓட்டுப் போடல, நீயி 2060 பத்தி இன்னாத்துக்கு ஃபீலிங்ஸு வுடப் போறேன்னு நம்ம மன்ஸாட்சி கேட்டுபுட்ச்சி, அத்தான் ஒண்ணும் சொல்லாம கலண்டுகினேன், ஆனா போட்டியிலே எய்துனவங்கோ சோக்கா இன்னா இன்னாமோ சொல்லிக்கீறாங்கோ, அத்த பட்ச்சி நாம ஓட்டுப் போட்டா தான அவுங்க கெலிச்சு வர முடியும். அத்தால, அல்லாரும் மறக்காம ஓட்டுப் போட்டுறுவோம் கொயிந்திங்களா!!!

இப்போ ஆராரு இன்னா எய்திக்கிறாங்கோன்னு ஒரு தபா கண்டுகிறேன்.

1. நீ இருபது நான் அறுபது - இணைய குசும்பன்

இவுருக்கு படா தில்லுபா. அல்லாரும் 2006 பத்தி கூவிக்கின்னு கீறப்போ தோ வுட்டேன் பாரு 2060ன்னு மொதோ கதிய இஸ்துகின்னு வந்து வுள்ளார போட்டாரு. குசும்பரு சூப்பர் சானிக்குன்னு சொல்றாரு, அத்த என்னோட ரிக்ஸாவாண்ட போட்டிக்கு வர்றியான்னு கேக்கலாம்ன்னு கீறேன். ஃபன் நெட்வொர்க்கு, பாயா டிவி, மண்கொண்டான், பொன்கொண்டாள்ன்னு ரவுண்டு கட்டி அட்ச்சிக்கீறாரு. அதுக்கே அவுருக்கு ஓட்டுப் போட்டுறலாமா, அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

2. தேர்தல் 2060 - கோகுல் குமார்

இன்னா தான் 2060 வந்தாலும் அன்னாடங்காச்சிங்க பொளப்பு துண்ட காணோம் துணிய காணோம்ன்னு தான் கெடக்கப் போவுதுன்னு சொல்றாரு கோகுலு. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நம்ம பொளப்பு நம்ம கையில தான்பா கீதுன்னு சொம்மா நெத்திப்பொட்டுல கின்னுன்னு அட்ச்சிச் சொல்லிக்கீறாரு. அதுக்கே அவுருக்கு ஓட்டுப் போட்டுறலாமா, அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

3. தேர்தல் 2060 சில குறிப்புகள் - பாஸ்டன் பாலாஜி

இன்னாமா கண்ணுங்களா 2006 எலிக்ஸனுக்கு மட்டும் தான் கருத்துக்கணிப்பு நடத்தணுமா, நா நடுத்துறேன் பாருபா 2060க்குன்னு ஒரு கருத்துக்கணிப்பு நடத்திக்கீறாரு பாபா. கருத்துக்கணிப்புல கணிப்பு எதுனா சொல்லலாம், ஆனா கணிப்புக்கே ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

4. தேர்தல் 2060 - பங்ஸ்பார்ட்டி

ஜனநாயகம் எல்லாம் பணநாயகமா பூட்ச்சி, அத்தால எலிக்ஸனு மாறி பூட்ச்சு. கச்சிக்காரங்களே எலிக்ஸனு வெச்சிக்கீறாங்கோன்னு ஆரம்பிச்சி சயன்ஸு ஃபிக்ஷனு டகால்டில்லாம் வுடாம 2006 மேரியே எலிக்ஸனு வெச்சி கலீஜு வேல எல்லாம் பார்த்து எலிக்ஸனுல கெலிச்சுப்புட்டாங்கோன்னு சொல்லிக்கீறாரு. ரோசன செஞ்சு பாக்கசொல்லோ அப்டி கூட நடக்கும்ன்னு தோணுது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

5. தனியைத் தக்க வை - நடராஜன்

நம்ம நடராசரும் அறிவியல் அவியல் தான் சமைச்சுக்கீறாரு. சொம்மா சொல்லக்கூடாது, நல்லா டேஸ்ட்டாவே சமைச்சுக்கீறாரு. எந்த ஊர்ல குந்திகினும் சொந்த தொகுதியிலே ஓட்டுக் குத்தலாமாம் 2060ல. இதுங்காட்டி இப்போவே இர்ந்துச்சுன்னா மாமியாரு வூட்டுல குந்திக்கினே குப்ஸாமி ஓட்டுப் போட்டுருப்பேன், கை நயுவி பூட்ச்சி. பொண்ணுங்களுக்கு சம உரிமையாம் அல்லாத்துலேயும், படிக்கசொல்லோ சோக்கா தான் கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

6. தேர்தல் 2060 - பெனாத்தல் சுரேஷ்

2006 எலிக்ஸனுக்கே அட்ச்சி தூள் கெளப்புனாரு, 2060 எலிக்ஸன சொம்மாவா வுடுவாரு. இதுலியும் அட்ச்சி பின்னி பெடலு எட்த்துக்கீறாரு. இவுரு எய்துனதும் அறிவியல் பூனை ச்சே புனைகதை தான். கத நடுந்துகின்னு கீறப்போ ஊடால "இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்" வர்றசொல்லொ குபீர்னு சிரிப்பு வருது. கடேசில கதிய முடிச்சிக்கீறதும் சோக்கா தான் கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

7. தேர்தல் 2060: சரித்திரம் திரும்புமா? - ராமச்சந்திரன் உஷா

உஷா எய்திக்கீரதும் அறிவியல் அவியலு தான். மன்ஸனோட ப்ரீடம் மண்ணா பூட்ச்சி 2060ல, மறுக்கா பளைய மேரி எலிக்ஸனு வருமான்னு ஃபீலாவுது இந்தக் கத. 2060லேயும் ஒரு பயாஸ்கோப்பு பார்ட்டி எலிக்ஸனு டைமுல கச்சி ஆரம்பிச்சு டகால்டி காட்ட ஆரம்பிக்கிறாரு. அல்லாரும் தாத்தா சுஜாதாவோட "என் இனிய இயந்திரா" கத மேரி கீதுன்னு சொல்லிக்கீறாங்கோ. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

8. தேர்தல் - 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் - குந்தவை வந்தியதேவன்

குளம்படி கதிங்களும், குடும்ப கதிங்களுமா எய்திகினு இர்ந்தவரு எலிக்ஸன் 2060க்கு கத எய்திக்கீறாரு. சொம்மா சொல்லக்கூடாது, சோக்காவே எய்திக்கீறாரு. தாத்தா சுஜாதாவோட கதிங்கள ஓவரா பட்ச்சிருப்பாரு போலக்கீது, மண்டைக்குள்ள மசாலாவெல்லாம் வெக்கிறதா சொல்லி பயா|ஸ்கோப்பு காட்டுறாரு. கதயிலே தாத்தா, அம்மாவெல்லாம் கூட மெய்யாலுமே வந்து போறாங்கோ, படிக்கசொல்லோ ஒரே குஜாலா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

9. பிறிது - பச்சோந்தி

எலிக்ஸன் 2060ல இன்னா மேரி வாக்குறிங்க அல்லாம் மக்களுக்கு நம்ம பாலிடிக்ஸு பார்ட்டிங்கோ குட்ப்பாங்கோன்னு ரொம்பவே ரோசன பண்ணி எய்திக்கீறாரு. 2060ல நடக்குற மேட்டருங்களா செல விஸ்யம்ல்லாம் சொல்றப்போ தற்கொல கணக்கு மன்ஸ பேஜார் பண்ணுது (இப்போ நம்ம பார்ட்டி ஷ்ரதா கழுத்துல கயித்த மாட்டிகின்னு தொங்கி பூட்ச்சிபா, குப்ஸு ஃபீலிங்ஸு ஆயிட்டான்). 2060ல நடக்கப்போற எலிக்ஸனு பத்தி நெறியா பாயிண்டு சொல்லிக்கீறாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

10. கொட்றாங்கோ! கொட்றாங்கோ!!! - demigod

இதுவும் அறிவியல் அவியலு தான். ஆனா பொஸுக்குன்னு கதிய முட்ச்சிடுறாரு. 2006 எலிக்ஸனுல நம்ம பாலிடிக்ஸு பார்ட்டிங்கோ குட்த்த இஷ்டேட்மெண்டெல்லாம் சோக்கா கலாய்க்கிறாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

11. எனது டைரி - 10/3/2060 - கனா

கனா, பேருக்கு ஏத்த மேரியே நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுல்லாம் பலிச்சிட்ச்சுன்னு டைரி குறிப்ப ஆரம்பிக்கிறாரு. 2060ல அல்லாரும் பட்ச்சவங்களா கீறாங்கோ, ஜோலி இல்லாம கீற ஆளுங்கோ ரொம்ப கம்மியா பூட்டாங்கோ. நம்ம கஜேந்திரா வுட்ட கொரலுல ஊழலு கூட கம்மியா பூட்ச்சி. ஜாதிய சொல்லி எட ஒதுக்கீடு கெடியாது, அரசியலு காலேசுன்னு கலாசுறாரு. படிக்கசொல்லோ இந்தக் கனவுல்லாம் மெய்யாலுமே நடந்தா சோக்கா இருக்கும்ன்னு தோணுது. இத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

12. தேர்தல் 2060 - டுபுக்கு

அறிவியல் அவியலு எய்துன அல்லாரும் தாத்தா சுஜாதா பாணிய சுட்டு எய்துறோம்ன்னு சொல்லாம சொல்லிக்கீறாங்கோன்னா இவரு இஷ்டார்ட்டு பண்றப்போவே "இந்தக் கதிய பட்ச்சா தாத்தா நாபவம் வரும்பா"ன்னு சலாம் வெச்சிடுறாரு. சொல்ற மேரியே தாத்தா ரூட்டுலேயே இந்தப் பேரனும் எய்திக்கீறாரு. கதிய பட்ச்சி முடிக்கசொல்லோ நம்ம ஐஐடி கொய்ந்திங்கோ ஆரம்பிச்சு புட்டுகின்ன லோக் தரித்திரன் ச்சே லோக் பரித்ரன் தான் மைண்டுல வந்து நிக்கிது. கத சொல்ற ஃப்ளோ சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

13. தேர்தல் - 2060 - பாலா

இதுவும் அறிவியலு அவியலு தான். அறிவியலு கத எய்துற அல்லாருமே புச்சு புச்சா ரோசன சொல்லிக்கினே போறாங்கோ. இவுரும் சோக்கா ரோசன சொல்றாரு. அல்லா கச்சியும் கம்பெனியா மாறி பூட்ச்சாம். எந்த கம்பெனிக்கு வோணும்ன்னா எலிக்ஸன்ல குத்தலாம், ஆருமே வேணாம்ன்னும் சொல்லலாம், புட்ச்சவங்கோ பேரையும் சொல்லலாம். சோக்கா கீது. கடேசியா கதிய முட்ச்சதும் சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

14. தேர்தல் 2060 - சிறில் அலெக்ஸ்

2021ல பெர்சா மின்னணு பொர்ச்சி வந்து ஒலகமே மாறி பூட்ச்சின்னு ஆரம்பிக்கிறாரு. இவுரு பேஸ்ர தமிள அமெரிக்கால கீற இங்கிலீஸுக்கார சொக்கா போட்ட மச்சான் சோக்கா புர்ஞ்சிக்கிறான், அவன் சொல்றத இவுரு புர்ஞ்சிக்கீறாரு. அதுக்கெல்லாம் மெசினு கண்டுபுட்ச்சிட்டாங்கோ அப்போ. சிறிலு சார், நம்ம கொஸப்பேட்ட தமிளுக்கு எதுனா கீதாபா? இவுரோட கதியும் எய்துன ஃப்ளோவும் கடேசில முடிக்கிறதும் சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

15. நேற்று இன்று நாளை - ஆனந்த் சங்கரன்

நேத்து எப்டிபா இர்ந்துச்சு எலிக்ஸனு (50 வர்ஸத்துக்கு முன்னால), இப்போ எப்டிபா கீது, நாளிக்கு எப்டிபா இர்க்கும் (50 வர்ஸத்துக்கு அப்பால), மூணுத்தையும் லிஷ்ட்டுப் போட்டு பெர்ஸா ஒண்ணும் ஆகிடாதுபா, அத்தே தான் அப்டியே இர்க்கும்ன்னு சொல்லிட்டாரு ஆனந்து. படிக்கசொல்லோ அப்டியும் நடக்கலாம்ன்னு தோணுது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

16. 2060 - தேர்தலை நடத்தப்போவது யார்? - இரா.சுகுமாரன்

ஆனந்து சொன்ன மேரி தான் சுகுமாரும் செஞ்சிக்கீறாரு. ஆனா நெறியா மேட்டர உள்ளார இஸ்துகின்னு வந்து வுட்டுக்கீறாரு. படிக்கசொல்லோ இதான் நடக்கப் போவுதோன்னு தோணுது. தண்ணிய நம்பி வெவசாயம் பண்ணவன் எல்லாம் குப்ஸாமி மேரி ரிக்ஸா வளிச்சிகின்னு போவணும் போல. பறக்குற காரு வந்தாலும் அன்னாடங்காச்சிங்க பொயப்பு என்னைக்குமே நாறிப் போன பொலப்பா தான் இர்க்கும் போலக்கீது. நல்லா மன்ஸுக்குள்ளே பச்சக்குன்னு ஒட்டிக்கிற மேரி சொல்லிக்கீறாரு சுகுமாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.

அல்லாருக்கும் பட்ச்சிப் பாத்து தான் போடணும்ன்னு சொல்றியே குப்ஸு, நீ ஆருக்குபா எலிக்ஸனுல குத்தப் போறேன்னு கேக்காதிங்கோ. ஓட்டுக் குத்திப்போட்டு வந்து ரெட்ட வெரலு காட்ட நா இன்னா சூப்பரு இஷ்டாரா? ரிக்ஸா வளிக்கிற குப்ஸாமி சார். பட்ச்சிப் பாக்கசொல்லோ புட்ச்ச கதிங்களுக்கு ஒரு குத்து குத்திட்டு போய்கினே இர்க்க வேண்டியது தான். நம்ம பொலப்ப நாம பாக்க வாணாமா?

நீங்களுகும் மறக்காம ஓட்டப் போட்டுறுங்கபா

Sunday, April 23, 2006

எலவசமாம் எலவசம் - பார்ட் 2

தாத்தா ஒரு சைடுல ரெண்டு ரூவாய்க்கு அரிசி, ரெண்டு ஏக்கரு நெலம், கலரு பயாஸ்கோப்பு பொட்டி, அத்துல பயாஸ்கோப்பு பாக்க கேபிளு டிவி அல்லாம் குட்க்கிறேன்னு சொல்றாரு. அம்மா ஒரு சைடுல, ரெண்டு ரூவா இர்ந்தா அரிசி போடுவேன்னுல்லாம் கறாரா இர்க்க மாட்டோம்பா நாங்கோ, உனுக்கு துண்றதுக்கு சோறு வோணுமா நேரா ரேசனு கடையாண்ட வா, பத்து கிலோ அரிசிய அப்டியே அமுக்கிக்கின்னு போன்னு சொல்றாங்கோ. இவுங்கல்லாம் வுடுற கொரலு போதாதுன்னு நம்ம கஜேந்திரரு ஒரு சைடுல "இன்னாத்துக்கு நீயி கடையாண்ட வரணும்? ஒன்னோட ஊட்டுக்கு வந்து குடுக்கச் சொல்றேன் பாஞ்சி கிலோ அரிசி"ன்னு சொல்றாரு. அத்தோட வுட்டாரா!!! பலசரக்கு சாமான் வாங்க ஐநூறு ரூவா தர்றேன், ரெண்டு புள்ள பெத்துக்குற அல்லாருக்கும் அந்த ரெண்டு புள்ளிங்களும் மூணு வயிசு ஆவுற வர என்னோட கொய்ந்திங்கோ மேரி பாத்துக்க மாசம் ஐநூறு ரூவா தர்றேன்னு சொல்றாரு. அல்லாமும் குட்த்துட்டு கூடவே ஒரு சீமப்பசுவும் குடுக்குறாராம். இந்த எலிக்ஸனே ஒரு எலவச எலிக்ஸனா இர்க்கும் போலக்கீது.

இத்தல்லாம் பாக்கசொல்லோ குப்ஸாமிக்கு ரிக்ஸா மிதிச்சு சம்பாரிக்க வாணாம்ன்னு தோணுது. இன்னோரு மேட்டரும் குண்ஸா வந்து மன்ஸுக்குள்ளே குந்திக்கிச்சு. அத்து இன்னான்றிங்களா? எலவசமா இத்தெல்லாம் தர்ற தாத்தா, அம்மா, கஜேந்திரரு அல்லாரையும் சிஎம்மு ஆக்கிபுட்டா இன்னா? கஜேந்திரரு வூட்டாண்ட வந்து குடுக்குற பாஞ்சி கிலோ அரிசி போதலன்னா ரேசனு கடையாண்ட போயி அம்மா பேரச் சொல்லி பத்து கிலோ அரிசி வாங்கிக்கலாம். எலவசமா கெடைக்கிற இருவத்தஞ்சி கிலோ அரிசி பத்தாங்காட்டி மட்டும் தாத்தா குடுக்குற அரிசிய ரெண்டு ரூவாய்க்கு வாங்கி துண்ணலாம். பயாஸ்கோப்பு பொட்டி தாத்தா குடுப்பாரு, அத்த வெச்சி பயாஸ்கோப்பு பாத்துக்கலாம். கஜேந்திரரு பசுமாடு குடுப்பாரு, பாலக் கறந்து நல்லா குடிக்கலாம். தாத்தா குடுக்குற ரெண்டு ஏக்கரு நெலத்த வச்சி சொம்மா வேடிக்கப் பாக்கலாம் (அல்லாமே எலவசமா குடுக்குறப்போ இன்னாத்துக்கு வேல செய்யணும்).

இன்னாபா சொல்றிங்கோ, அல்லாரையுமே சிஎம்மு ஆக்கிப்புடலாமா?

Monday, April 10, 2006

எலவசமாம் எலவசம்

எலவசம் குடுக்குற மேட்டருல கருப்புத்துண்டு வைகோவுக்கும் தாத்தாவுக்கும் எதுனா உள்குத்து கீதோன்னு தோணுதுபா. நீயி அம்மா சைடு போயி கொரலு வுடு, நானும் எதிர்கொரலு வுடுறேன்னு தாத்தாவே அனுப்பிருப்பாரோன்னு தோணுது. "நா அடிக்கிற மேரி அடிக்கிறேன், நீயி அயுவுற மேரி அயுவு" கத தான். ரெண்டு ரூவாய்க்கு எப்டி அண்ணாத்தே அரிசி குடுப்பேன்னு இவரு கேக்க, "இப்டி குடுப்பேன் தம்பி"ன்னு இவரு எதிர்கொரலு குடுக்குறாரு. "டிவி பொட்டி எப்டி அண்ணாத்தே குட்ப்ப"ன்னு இவரு கேக்க, "இப்டி இப்டி குட்ப்பே"ன்னு அவரு மறுக்கா எதிர்கொருலு வுடுறாரு. கட்டே கடேசியா கருப்புத்துண்டு அட்ச்சாரு பாரு அடி, அது அம்மாவுக்கு செம்ம அடி. "டிவி குட்த்தா போதுமா, கேபிளு எலவசமா குட்ப்பியா"ன்னு கொரலு வுட்டாரு. "ஆனையே குடுக்குறேன், அங்குசமா குடுக்க மாட்டேன், வோணும்ன்னா அதுவும் குட்ப்பேன்"ன்னு தாத்தா எதிர்கொரலு வுடுறாரு.

இப்டியே அம்மா கட்சில சைடு வுட்டுக்கின்னு தாத்தாவுக்கு கொளுகப்பரப்பு செய்றாரு கருப்புத்துண்டு. சூப்பரு ஐடியா தான் போலக்கீது. தாத்தா சீட்டுல வந்து குந்திகினா, "அண்ணாத்தே, நா அப்டி கேள்வி மேல கேள்வியா கேக்கசொல்லோ தான நீயி கெலிச்ச"ன்னு மேடையிலே ஒரு அளுவாச்சிய போட்டுடுவாரு கருப்புத்துண்டு. "நீரடிச்சி நீரு வெலகுமா தம்பி"ன்னு தாத்தாவும் ஒரு அளுவாச்சிய போட்டு ஒண்ணு சேத்துக்குவாரு. அதுலயும் தாத்தா பெர்ய கில்லாடி, ரைட்டு ஃஹேண்ட கருப்புத்துண்டு மேல போட்டுக்கின்னு லெஃப்ட்டு ஃஹேண்டால பேராண்டி கைல "இத்த சன் டிவில காட்ட வாணாம்"ன்னு சொல்லிடுவாரு.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

Saturday, February 25, 2006

சூப்பர் கூட்டணி

நம்மூர்ல பெர்ய கன்ஃபூஸன்ல கீறது யார்பான்னு கேட்டா அல்லாரும் "தாத்தா கலீஞரு"ன்னு கரீட்டா சொல்லுவாங்கோ. அல்லாம் கூட்டணி மேட்டரு தான். கருப்புத்துண்டு மாமா ஒரு சைடா இஸ்துகின்னு போவேன்னு கொரலு வுடுறாரு. பீச்சாங்கை சைடுல மரவெட்டி ஐயா "குட்த்தா கருப்புத்துண்டுக்கு குட்குறத வுட ரெண்டு கூட குடு, இல்லாங்காட்டி என்னிய வுடு"ன்னு கொரலு வுடுறாரு.

தாத்தா கன்ஃபூஸன் வெளில தெர்ஞ்ச கன்ஃபூஸன், அம்மா கன்ஃபூஸனே இல்லாத மேரி காட்டிக்கின்னு பெர்ய கன்ஃபூஸன்ல கீறாங்கோ. கதவ தொற்ந்து வெச்சிக்கீறேன், ஜன்னல தொற்ந்து வெச்சிக்கீறேன்னு டயலாக்கு வுட்டுக்கின்னு சுத்துறாங்கோ.

ரெண்டு பேர்க்குமே ஒரே கன்ஃபூஸன் கூட்டணி தான். இந்த கன்ஃபூஸன களட்டிவுடணும்ன்னா இன்னா செய்யலாம்ன்னு ரெண்டு பேரும் ரோசன சேஞ்சிருப்பாங்கோ போல. "இன்னிய சீஃப் மினிஷ்டரு நானு, அன்னிய சீஃப் மினிஷ்டரு நீயி, இன்னாத்து கண்டவனுக்கு கதவ தொற்ந்து வெச்சிக்கின்னு இர்க்கோணும். நம்ம ரெண்டு பேருமே கூட்டணி வெச்சிக்கின்னா இன்னா தாத்தா"ன்னு அம்மா கேட்டுருப்பாங்கோ போலக்கீது. தாத்தாவும் "இந்த ஐடியா ஜூப்பரா கீதே"ன்னு நென்ச்சிருப்பாரு போலக்கீது. இந்த எலிக்ஸன்ல ரெண்டு கச்சியும் கூட்டணி போட்டு நிக்கப்போறாங்கோ.

இன்னா நயினா, டவுட்டா கீதா?? டவுட்டு இர்ந்தா இந்த போட்டோவ பாருபாஅம்மா கச்சியும் தாத்தா கச்சியும் ஒட்டுக்கா சேந்து ஓட்டுக் கேக்குறாங்கோ......

Monday, February 13, 2006

புள்ளையப் பெத்தா

"தென்னையப் பெத்தா எளநீரு, புள்ளையப் பெத்தா கண்ணீரு"ன்னு ஒரு பளைய பாட்டுக்கீது. சோக்கான பாட்டுபா அது. இப்போ இன்னாத்துக்கு குப்ஸாமி அந்தப் பாட்டுன்னு கேக்குறிங்களா? மேட்டரு கீதுபா. இப்போ அந்தப் பாட்ட தான் நம்ம தமிழ்நாட்டு தாத்தா கலீஞரு பாடிக்கின்னு கீறாராம்.

இருக்குற 234 தொகுதிய கூட்டணிங்களுக்கு எப்டி பிர்ச்சி குட்கற்துன்னே தாத்தா மண்டைய பிச்சிக்கிறாரு (அங்க இன்னாகீது பிச்சிக்கன்னு யார்னா கேக்காதிங்கபா, அப்பாலிகா குப்ஸாமிக்கு பதிலு சொல்லத் தெர்யாது). இதுல உள்கச்சி மேட்டரு இன்னும் பிச்சிக்க வெக்கிது போல.

ஒரு சைடுல இஸ்டாலினு தலீவரு "நைனா எனுக்கு 50 சீட்டு குடு"ன்னு கேக்குறாரு, இன்னொரு சைடுல அளகிரி தலீவரு "நைனா எனுக்கு 40 சீட்டு குடு"ன்னு கேக்குறாரு. இருக்குற ரெண்டு புள்ளிங்கோ போதாதுன்னு வூட்டுக்காரம்மாவும் கேக்குறாங்கோ, அவுங்களுக்கு 5 சீட்டு வோணுமாம். பேராண்டிய வளத்துவுட்டு செண்ட்ரலுக்கு அனுப்பிப்புட்டா போச்சா, அவுருக்கு சீட்டு குடுக்கலன்னா ரீஜண்டா இர்க்குமா, அவுருக்கு 10 சீட்டு வோணுமாம்.

இப்டி அல்லாருக்கும் சீட்டுப் பிர்ச்சிக் குட்த்துட்டா தாத்தாவுக்கு எத்தன சீட்டு கீதுன்னு நெனிக்கிறிங்கோ? ஒரே ஒரு சீட்டு தான். அதுவும் அவுரு நிக்கிற தொகுதி மட்டும். இப்போ சொல்லுங்கபா, அவுரு இன்னா பாட்டுப் பாடுவாருன்னு???

Thursday, February 02, 2006

அன்பான காரு

நம்மூருல மினிஷ்டரா இர்க்கசொல்லோ இன்னா மேரி கில்பான்ஸ்ல்லாம் பண்ணலாம்ன்னு பாருங்கபா. எல்த்து மினிஷ்டரு அன்புமணி கீறாரே, அவுரு ஜனவரி 29ம் தேதி ஈரோட்டாண்ட விசிட்டு அட்ச்சாராம். அவுருக்கு ரவுண்ட்ஸு வுட ஒரு டுபாக்கூரு ஜீப்ப குட்த்துட்டாங்களாம். ஒடனே ரைட்டு ஹாண்டு லெஃப்ட்டு ஹாண்டு கண்மணிங்கோ சொம்மா இர்க்குமா. எங்க தலீவருக்கு புச்சா ஒரு காரு கொண்டாந்து அதுல வுடுரோம்டா ரவுண்ட்ஸுன்னு சொல்லிகினு ஒரு கார்ல கொடி கட்டிக்கினு வந்துட்டாங்க (மினிஷ்ட்டருன்னா தேசிய கொடி கட்ன கார்ல தான போவணும்).

மினிஷ்ட்டருக்கு காரு கொண்டாந்த கண்மணிங்கோ கொடியெல்லாம் கரீட்டா கட்டிட்டாங்க. ஷோரூம்லேர்ந்து எட்த்துகினு வரசொல்லோ ஒரு நம்பரு பிளேட்டும் ஒட்டிகினு வந்துருக்கலாம். அத்த மட்டும் டீல்ல வுட்டுட்டாங்கோ. மினிஷ்ட்டரா இர்க்கசொல்லோ நம்பரு பிளேட்டு இல்லாம ரவுண்டு வுட்டா போலீஸு வந்து கேள்வியா கேட்டுகின்னு இர்க்கப்போவுது.