Monday, August 30, 2004

அசத்தல் ஆண்டனி

நம்ம ஆண்டனி சேட்டன் கேரளத்து தாத்தா கருணாகரனுக்கு ஆப்போசிட்டா இம்மா நாளு அட்ச்சி ஆடிக்கின்னு இர்ந்ததே பெர்ய விசயம் தான். தாத்தா இன்னா டகுலு வுட்டாலும் அதுக்கு ஒரு கொய்யான் சிரிப்பு மாத்ரம் சிரிச்சிக்கின்னு பதில் சொல்லாம எஸ்கேப்பு ஆவுரதுல அண்டனி அண்ணாத்தே ஆளு பலே கில்லாடி. நம்மூரு தாத்தா கணுக்கா கருணாகர தாத்தாவும் புள்ளிங்கள பாலிட்டிக்ஸ்ல இஸ்துக்கின்னு வந்து வுடணும்ன்னு இன்னா மேரி டகுலு வித்த காட்டியும் ஆண்டனி கைல ஒண்ணும் வேகலை. எதுனா எசகுபெசகா எட்த்து வுடலாம்ன்னு பாத்தாலும் அண்ணாத்தே செம்ம கையி சுத்தம்.

இன்னா இர்ந்து இன்னா பண்றது. நேத்திக்கு சோனியா வந்ததும் ஆண்டனி கைல "இன்னா கண்ணு, ஒன்னோட வூருல நம்ம கச்சிக்காரங்கோ ஒரு சீட்டு கூட எடுக்கல, நீயி இன்னாத்துக்கு சிஎம்மா குந்திக்கின்னு கீறே"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. கேரளத்து காங்கிரஸுல இர்க்கிற அடிதடி தெர்ஞ்ச சோனியா அம்மாவே இப்டி கேக்க, நம்ம அண்ணாத்தே படா ஃபீலாயிப்புட்டாரு. "எனுக்கு சிஎம்மு போஸ்ட்டு வாணாம் போ"ன்னு கொய்ந்த புள்ள கணுக்கா சொல்லிப்புட்டு வந்துட்டாரு.

ஆனா ஒண்ணு மட்டும் சொல்லணும் அண்ணாத்தே. எங்க தமிள்நாட்டுல "பதவி எங்க தோள்ல கிடக்கிற துண்டு மாதிரி"ன்னு டயலாக்கு வுட்ட கச்சிலேர்ந்து வந்த பெர்ய மன்ஸங்கோ அல்லாம் அட்தது தன்னோட புள்ளிங்க தான் தன்னோட சீட்டுல குந்தணும்ன்னு சாடையா சொல்லிக்கின்னு கீறப்போ, நீ மாத்ரம் "எனுக்கு அது துண்டு கூட இல்லபா, தொட்ச்சி கீளே போடுற ஐட்டம் மேரி"ன்னு சிஎம்மு போஸ்ட்டுக்கு கல்தா குட்த்த பாரு. மெய்யாலுமே நீயி பெர்ய மன்ஸன்பா.

Sunday, August 29, 2004

அபாங் ஆப்பு

ஆகா அருணாச்சல பெர்தேஸமா கொக்கா. இன்னாமா சோக்கு வேலியெல்லாம் காட்றாங்கபா அந்தூருக்காரங்கோ. முன்னே ஒருக்கா காங்கிரஸுலேந்து அப்டியே அலேக்கா அல்லாரும் அருணாச்சல் காங்கிரஸுன்னு புச்சா ஒரு ஆட்டைய போட்டாங்கோ. அப்பாலிக்கா போன வர்ஸம் பிஜேபி கூட அப்டியே அட்டாச் ஆனாங்கோ. அந்த நேரத்துல பிஜேபி ஆட்டம் பெர்ய ஆட்டமா தான் இர்ந்துச்சு. தன்னோட ஸைடுலேர்ந்து ஒரு எம்எல்ஏ கூட இல்லாத காவி கச்சிக்கு 37 எம்எல்ஏ கெட்ச்சதும் அவுங்களுக்கு தலகாலு பிர்யாத ஆட்டமா இர்ந்துச்சு. இப்போ ஒட்டுக்கா ஆப்பு அட்ச்சிப்புட்டு திரும்ப காங்கிரஸுக்கே தன்னோட அல்லங்கைங்கள கூட்டியாந்துட்டாரு அபாங்கு.

அபாங்கு அல்லங்கைங்களுக்கு அப்டியே ஆட்டுமந்த மேரி மைண்டு போல கீது. அபாங்கு 1996ல நம்ம சிரிக்க தெர்யாத மன்ஸன் நர்சிம்மராவோட கா வுட்டுப்போட்டு காங்கிரஸ வுட்டு வெளில வந்ததும் அல்லங்கைஸும் அப்டியே வெளில வந்தாங்கோ. அப்பாலிக்கா இன்னா ஆச்சுன்னு தெர்ல, முகுத்து மித்தி ஆட்டைய கலைச்சுப்புட்டாரு. ஆட்டுமந்த கூட்டம் அபாங்கை அம்போன்னு வுட்டுப்போட்டு மித்தி கூட மூணு வர்ஸம் ஆட்டம் போட்டாங்கோ. போன வர்ஸம் மித்திய மிதிச்சுப்போட்டு திரும்ப அபாங்கு கூட அட்டாச் ஆகிப்புட்டாங்கோ. அபாங்கும் காவி கச்சி கூட ஐக்கியமாகி சிஎம்மு சீட்ட புட்ச்சிக்கின்னாரு.

இப்போ எலிக்ஸன் வர்ற டைமுல காவி கச்சிக்கு அபாங்கு ஆப்பு வெச்சிப்புட்டாரு. அல்லங்கைஸும் கரீட்டா அபாங்கு கூடவே வந்து காங்கிரஸுல ஐக்கியமாகிப்புட்டாங்கோ. இத்து நம்ம வெங்காய நாயுடு எதிர்பாக்காத டர்னிங்கு பாயிண்டு. போன வர்ஸம் இதே நேரத்துல ஒரு எம்எல்ஏ தன்னோட கச்சில இல்லாங்காட்டியும் அபாங்கோட 37 ஆளுங்கள வச்சிக்கின்னு கொரலு வுட்ட காவி பார்ட்டிங்களுக்கு திரும்ப பூஜ்ய ராசி தான் போல. இருவத்தஞ்சு வர்ஸம் அந்த வூருல குப்ப கொட்டி இன்னாத்த கண்டோம்ன்னு வெங்காய நாயுடு பொலம்பிக்கின்னு இர்ந்தாலும் இர்ப்பாரு.

Wednesday, August 25, 2004

அடுத்த சிஎம்மு

நம்ம வூரு பத்திரிகைங்களுக்கு வேற பொளப்பே கெடியாதுபா. எப்போ பாரு எவன் இன்னா பண்ணான், எந்தப் பொண்ணு ஆரால கெட்டுப்போனான்னு எதுனா எய்திக்கின்னே இர்ப்பாங்கோ. கேட்டாக்கா இன்வஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு இங்கிலிபீஸுல எதுனா சொல்லுவாங்கோ. இன்வெஸ்ட்டிகேடிவ்வா எய்தணும்ன்னா நாட்டுல எய்த மேட்டரா இல்ல? எந்த அமைச்சரு இன்னா ஊளலு பண்றான்னு எய்து. எந்த கவுருமெண்டு அதிகாரி தன்னோட ஜோலிய ஒய்ங்கா செய்யலைன்னு எய்து. அத்தெல்லாம் வுட்ருவாங்கோ, பொம்பள பின்னாடி அலையிறது தான் இப்போ இன்வெஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு சொல்றாங்கோ.

முன்னே கொஞ்ச நாளு அல்லாரும் செரினான்னு ஒரு பொண்ணு பின்னாலேயே சுத்திக்கின்னு இர்ந்தாங்கோ. அத்து மூஞ்ச அங்க இங்க திருப்புனா கூட அதுக்கு எதுனா காரணம் சொல்லிக்கின்னு இர்ந்தாங்கோ. அத்த எய்தி முட்ச்சாச்சு. இப்போ புச்சா கெளம்பிக்கீற மேட்டரு நம்ம செயலச்சுமியக்கா. செரினா மேட்டர்ல கூட பின்னால இர்ந்தது பெரிய அர்சியல் ஆளுங்கோன்னு கொஞ்சம் போட்டோல்லாம் அடக்கி வாசிச்ச பத்திரிகைங்கோ இந்த மேட்டருல ஒரே போட்டோவா போட்டு கிளிச்சி எட்க்கிறாங்கோ. அந்த அக்காவும் நீயி எத்த வேணா எய்திக்கோ எப்டி வேணா போட்டோ புட்ச்சிக்கோன்னு போஸ் குடுக்கிது.

சரி, மேட்டருக்கு வருவோம். இப்போங்காட்டி தமிள்நாடு இஸ்டேட்டு எலிக்ஸன் வர்துன்னு வெய்யிங்கோ, நம்ம தாத்தா கலீஞரு அப்டியே செயலச்சுமியக்காவ அமுக்கி தன்னோட கச்சிக்கு இஸ்துக்கின்னு வந்துடுவாரு. பர்கூரு தொகுதில அம்மாவுக்கு ஆப்போஸிட்டு செயலச்சுமி தான். செயலலிதாவா செயலச்சுமியான்னு ஆயிப்புடும். கெலிக்கிறது யாரா இர்க்கும்ன்னு நெனிக்கிறிங்கோ?? சுகுரா செயலச்சுமியக்கா தான் கெலிக்கும். அப்பாலிக்க அட்த்த கொஞ்சம் வர்ஸத்துல யக்கா தான் சிஎம்மு.

Tuesday, August 24, 2004

பாவம் தாத்தா

நம்ம சுஜாதா தாத்தா ரொம்ப பாவம்பா. எப்பனா எதுனா எசகுபெசகா எய்தி மாட்டிப்பாரு (இத்த எய்துசொல்லோ எனுக்கு ஒம்போது கெட்டளைங்கோ வேற ஞாபகத்துக்கு வர்து). முன்னே ஒரு தபா கற்றதும் பெற்றதும்ல என்னமோ புச்சா இலங்கைத்தமிழில் இப்போ தான் இலக்கியவாதிகளே உருவாவது மாதிரி படிச்சு பாராட்டி இர்ந்தாரு. இப்போ பாராட்ட கூட செய்யாம குப்ஸாமியும் முன்ஸாமியும் எத்தோ எய்தி வெச்சிட்டு அத்த பத்து பேரு படிக்கணும்ன்னு காத்திருக்க தான் வலைப்பதிவுல எய்துறாங்கோன்னு வலப்பதிவு பத்தி சொல்லிக்கீறாரு. அத்த கூட இன்னமும் புளாக்கு புளாக்குன்னு சொல்லிக்கீறாரு. வாத்யாரே அதுக்கு தமிளு வார்த்த கண்டுபுட்ச்சி ரொம்ப நாளாச்சுபா.

தாத்தா நீங்க கற்றதும் பெற்றதும்ல பத்து வாரம் களிச்சு எய்தப்போற மேட்டருல்லாம் இப்போவே வலப்பதிவுல வர்து. அத்தெல்லாம் பட்ச்சி பாத்துட்டு அப்பாலிக்கா வலப்பதிவு பத்தி சொல்லி இருக்கலாம். அத்த வுட்டுப்போட்டு குப்ஸாமி கொரலு வுடுறத மட்டும் எங்கணா பட்ச்சிப்புட்டு பதிவுன்னாவே இப்டி தான் இர்க்கும்போலன்னு நென்ச்சிக்கின்னு எய்தாத வாத்யாரே.

எனுக்கு இன்னா ஒரு டவுட்டு வர்து தெர்யுமா. இந்த வலப்பதிவு மேட்டரெல்லாம் ஒண்ணாண்ட வந்து எட்த்து சொல்லி அத்த பரப்புறதுக்கு உன்னியவே தலீவரா போட்டு செஞ்சிருந்தா "வலப்பதிவா அது படா சோக்கு மேட்டருபா, அல்லாரும் அத்த ஒரு தபா செஞ்சு பாருங்கோ"ன்னு சொல்லிருப்பிங்களோ. என்னமோ செய்யி வாத்யாரே, நீ எத்த எய்துனாலும் பட்ச்சிக்க தான் நாங்கல்லாம் கீறோம்ல...

பிகு: இதுக்கு முன்ன ஒரு தபா "இணையத்துல தகவல் தான் கிடைக்கும், அறிவு அல்ல"ன்னு புச்சா ஒரு மேட்டர கண்டுபுட்ச்சி சொல்லி இர்ந்தாரு. அத்து இன்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லி இருக்கலாம் அவரு. வர வர அமேரிக்க புஸ்ஸு மேரி பேச ஆரம்பிச்சிட்டாருபா இவுரும்.

Saturday, August 21, 2004

அண்ணாத்தேஏஏஏஏஏ..... தம்பீஈஈஈஈஈ....

ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு பாசமலையே கொட்டுச்சுபா. மரவெட்டி ஐயாவும் மீசக்கார நண்பனும் "அண்ணா..... தம்பி"ன்னு கட்டி வுருண்டுகினாங்கோ. இப்டில்லாம் செய்ய மேட்டர் இல்லாமலா கீது, மேட்டர் கீதுபா கீது. தாத்தா இன்னும் கொஞ்ச நாளைக்கு தான், அப்பாலிக்கா தாத்தாவோட புள்ளிக்கு எத்தன ஆளுங்கோ கூட வருவாங்கோன்னு தெர்யாது. பொடா புகழ் வைகோ வேற காரணமே இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டாரு (இவுரு பொறந்த மூணாம் மாசமே நடக்க ஆரம்பிச்சு இர்ப்பாரு போலக்கீது. எதுனா ஒண்ணுன்னா படைய கெளப்பிக்கின்னு நடக்க ஆரம்பிச்சுடுறாரு. இன்னா தான் இஸ்டண்டு வுட்டாலும் குப்ஸாமிக்கு புட்ச்ச ஆளு இவுரு தான்பா). ஆடி காத்துல பொசுக்குன்னு போய் கோபுரத்துல குந்திக்கின்ன காஞ்ச எல மேரி இவரு பாட்டுக்கு அட்ச்சிக்கின்னு மேலே போய் சீட்ட புட்ச்சிட்டா இன்னா பண்றதுன்னு ஐயா ஃபீலாகிப்புட்டாரு. இதுல கேப்டனு வேற அப்ப வருவேன் இப்போ வருவேன்னு கொடச்சல குட்க்கிறாரு.

இன்னா பண்றதுன்னு பாத்தாரு ஐயா. பத்து பேரு எதுத்து நின்னாலும் பக்கத்துல கீறவன் கைய புட்ச்சிக்கின்னா ஒரு தெம்பு வந்துடும்ல. பக்கத்துல இர்க்கிறது நம்ம மீசக்கார நண்பன் தான். இத்தினி காலமா வெட்டிக்கின்னும் குத்திக்கின்னும் இர்ந்தவங்க தான். எலிக்ஸன் வந்தா மீசக்கார ஆளுங்கள ஓட்டு போட வுடாம கூட ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ அட்ச்சி ஆடினா ஆட்டமெல்லாம் வுண்டு. இன்னா தான் பண்ணி இர்ந்தாலும் நமக்கே ஆட்டம் காட்ட ஆளுங்கோ ரெடியானா அப்பாலிக்கா இன்னா பண்றது. அத்தான் "அண்ணா தம்பி"ன்னு பாசமலைய ரெண்டு பேருமா பொளிஞ்சிக்கின்னாங்கோ. கைய குட்த்துக்கின்னப்போவே "தம்பி நீ உள்துறைய எட்த்துக்கோ, எனுக்கு மெயின் சீட்ட வுட்டுப்புடு"ன்னு தான் ஐயா பேசிருப்பாரு. "இந்தாளு கூட சேரமா இர்ந்தா நமுக்கு கெடிக்கிற ஓட்டும் கெடிக்காது, அப்பாலிக்கா நம்ம ஒரு ஆளு மட்டும் தான் எலிக்ஸன்ல ஜெயிச்சு அதையும் அப்பாலிக்கா தார வாக்கணும்"ன்னு நென்ச்சி மீசக்கார நண்பனும் ஆட்டத்துல சேந்துக்கின்னாரு.

இந்தக் கூட்டத்துல ஆருக்கு இன்னா சீட்டு கெடிக்கிதோ இல்லியோ பங்கர் தச்சானுக்கும் அறிவுமதிக்கும் கொளுக பரப்பு செயலாளரு சீட்டு கண்டிப்பா வுண்டு. செம்ம இஸ்பீச்சு வுட்டுக்கீறாங்கோ.

இத்து ஒங்க அர்சியலு, இன்னா வேணா செஞ்சிக்கோங்கபா. இனிமே ஆரும் சாதி பேர சொல்லி அட்ச்சிக்காம இர்ந்த செரி....

Saturday, August 14, 2004

சொதந்திர தெனம்

போன தபா எத்தனாவது சொதந்திர தெனங்கிறத மறந்துபுட்டு இப்போ குந்திக்கின்னு கணக்குப் போட்டு இஸ்கோல் டீச்சருங்கோ கொய்ந்தைங்க கைல "கொய்ந்திங்களா, நாளிக்கு இத்னாவது சொதந்திர தெனம். அல்லாரும் இஸ்கூலுக்கு யுனிபார்ம் போட்டுக்கின்னு வந்துடுங்கோ"ன்னு கொரலு வுட்டுருப்பாங்கோ. "இன்னாபாது, இப்டி ஞாயித்துக்கெளமைல வந்துடுச்சு. எதுனா திங்க, செவ்வான்னு வந்தா ஒரு நாளு லீவு கெடிக்கும்"ன்னு இஸ்கூலு புள்ளிங்களும், ஆபீஸு ஜோலிக்கு போறவங்களும் ஃபீலாவாங்கோ. "இந்த தபா வூட்ல ஒரு வேலியும் செய்யக்கூடாது. சன் டிவில ஒரு புரோகிராமும் வுடாம பாத்துடணும்"ன்னு வூட்டுல கீற பொம்பளிங்கோ ஐடியா பண்ணிருப்பாங்கோ. "தலீவரு வசூல்ராஜாவ வெளில வுட்டுக்கீறாரு. பாட்டெல்லாம் சோக்காக்கீது. டிக்கெட்டு கெடிக்குமா, இல்லாங்காட்டி ப்ளாக்குல எதுனா வாங்க வேண்டி இர்க்குமா"ன்னு நம்ம நாட்டு வருங்கால தூணுங்கோ கன்னத்துல கை வெச்சி ரோசனப் பண்ணும். "இன்னாபாது, நாளிக்கு டாஸ்மாக்கு லீவு வுட்டாங்களா"ன்னு நம்ம தோஸ்துங்கோ ஃபீலாவாங்கோ. அர்சியல்வாதிங்கோ அரத்தூக்கத்துல வந்து காந்தி தாத்தா செலைக்கு மாலப் போடுவாங்கோ. வர்ஸத்துக்கு நாலு தபா மாத்ரம் குளிக்கிற காந்தி தாத்தா ரெண்டாவது தபாவா குளிப்பாரு.

சொதந்திர தெனத்தன்னிக்கு பயாஸ்கோப்பு மேட்டரா டிவில காட்றாங்கோன்னு ஃபீலாவுற நாமளும் இந்தச் சொதந்திர தெனத்துல ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடுறது கெடியாது, சொதந்திர தென வாள்த்துகள் சொல்றது தவுர.

அல்லாருக்கும் சொதந்திர தென வாள்த்துகள்பா....

Wednesday, August 11, 2004

காவி கட்டிய கேப்டன்

எப்டி இர்ந்த கேப்டனைய்யா



இப்டி ஆகிட்டாருபா....



மன்ஸன் காங்கிரஸு, திமுகன்னு எதேதோ தடவிப்புட்டு இப்போ கட்ஸியா காவிக்கட்சிக்காரங்கள புட்ச்சிக்கீறாரு. ம்ஹ்ம் அவுரு புட்ச்சாருன்னு சொல்றத விட காவிக்கட்சி இவர இஸ்துக்கின்னு போவ பாக்குது, அத்தான் கரீட்டு. என்னமோபா, அல்லாரும் நல்லார்ந்தா செரி.

இன்னா மேட்டர்ன்னு தெர்யாம மண்ட காயுறவங்களுக்கு

செய்தி: விஜயகாந்துடன் சி.பி.இராதாகிருஷ்ணன் சந்திப்பு

Tuesday, August 10, 2004

பொடாவுக்கு போடா

எதுனா செய்ய வேண்டியது, அப்பாலிக்கா அத்த வாணாம்ன்னு திர்ப்பி இஸ்துக்க வேண்டியதே நம்ம அம்மாவுக்கு ஜோலியா பூட்ச்சிபா. கோயில்ல ஆடு கோளி வெட்டாக்கூடாது, அத்த செய்யாதே, இத்த செய்யாதேன்னு எதுனா சொல்லிக்கின்னு இர்ந்தவங்கோ எலிக்ஸன்ல ஆப்படிச்சதும் அல்லாத்தையும் ஒவ்வொண்ணா இஸ்துக்கினாங்கோ. இப்போ திடீர்ன்னு வைகோ மேலே போட்ருந்த பொடா கேஸையும் இஸ்துக்கினாங்கோ.

இப்போ குப்ஸாமி கீறான். அவனோட ரிக்ஸாவுல எதுனா புச்சா சேஞ்சு பண்றான். அப்பாலிக்கா கொஞ்சநாளு களிச்சு அத்த வாணாம், பளசே இர்க்கட்டும்ன்னு மாத்துறான்னு வெய்ங்கோ, அப்போ அதுக்கு இன்னா மீனிங்கு. குப்ஸாமிக்கு ரிக்ஸாவ ஒளுங்கா மெயிண்டைன் பண்ண தெர்ல. அத்தானே மீனிங்கு. குப்ஸாமி அப்டி செஞ்சா அவுனுக்கும் ரிக்ஸாவுக்கும் தான் பெரச்சனை. ஆனா அத்தையே அம்மா செஞ்சாங்கன்னா அல்லாருக்கும் பெரச்சனை. இப்போ வைகோ மேட்டர்லியே அவர வுள்ள தூக்கிப்போட்டதால ஆருக்கு லாபம். அவரோட அரசியல் வாள்க்கைல ரெண்டு வர்ஸம் வேஸ்டானது தான் மிச்சம். நஸ்டம் மட்டும் தான் மிச்சம்.

டில்லில குந்திக்கின்னு கீறவங்கோ இன்னும் கொஞ்ச நாள்ல பொடாவுக்கு போடா சொல்லிடுவாங்கோ. அப்பாலிக்கா வைகோவுக்கும் பெரச்சனை வராது. டில்லிலேந்து இந்த மேட்டரு நடக்கிறதுக்கு முன்னால நாமளே செஞ்சிடலாம்னு அம்மா பொடா கேஸை இஸ்துக்கின்னாங்களான்னு தெர்ல. இல்லாங்காட்டி 2006 எலிக்ஸன்ல வைகோவ தன் சைடுக்கு இஸ்துக்கின்னு போற ப்ளானான்னும் தெர்ல. ஒண்ணுமே புர்யலே அர்சியல்லே, என்னமோ நடுக்குது மர்மமாய்கீது, ஒண்ணுமே புர்யலே அர்சியல்லே....

Saturday, August 07, 2004

ஆக்ட்டு வுடுறவங்களுக்கு வெளிநாட்டு ஆபீஸர் சீட்டு

இனிமே வெளிநாட்டு தூதரா ஆரைன்னா சீட்டுல குந்த வெக்கணும்ன்னா பயாஸ்கோப்புல ஆக்ட்டு வுடுறவங்கள தான் வெக்கணும் போலக்கீதுபா. மேட்டரு இன்னான்றிங்களா? ஈராக்குல நம்ம ஆளுங்க மூணு பேர இஸ்துகின்னு போயி வெச்சிக்கீறாங்கோல்ல. அந்த மேட்டருல "அமிதாப்பும் தர்மேந்திராவும் பேசுனா தீவிரவாதிங்கோ ஆளுங்கள வெளில வுட்றுவாங்கோ"ன்னு அந்த வூருல நமக்காக தீவிரவாதிங்களாண்ட பேசிக்கின்னு கீற ஷேக் அல் துலைமி சொல்லிக்கீறாரு.

இந்த ரோசனைய சொன்னது மட்டுமில்லே, "எனுக்கு ஆஸா பரேக்குன்னா இஸ்டம். அத்தால அம்முணிய வந்து பேச சொல்லுங்கோ. அப்பாலிக்கா நா இன்னும் இஸ்பீடா இந்த மேட்டருல பேசுறேன்"ன்னு சொல்லி சந்துல சிந்து பாடிக்கீறாரு. இன்னா ஷேக்கு, ஆக்ட்டு வுடுறவங்கோ மேல கீற ஷோக்கு இன்னும் போவலியா?

இந்த மேட்டர பட்ச்சதுலேந்து குப்ஸாமிக்கும் மண்டைக்குள்ள கிர்ர்ர்ர்ர்ருன்னு கீதுபா. ஆரைன்னா ரெண்டு பேர எஸ்கேப் பண்ணியாந்து வெச்சிக்கின்னு "இன்னாபா கொய்ந்திங்களா, ஒங்கள வெளில வுடணும்ன்னா சோதிகாவும், சினேகாவும் என்னாண்ட வந்து பேசணும். அப்பாலிக்கா தான் வுடுவேன்"னு கொரலு வுடலாமான்னு ரோசனையா கீது.

Tuesday, August 03, 2004

அடிச்சு ஆடும் ஐயா

நம்ம மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்களுக்கு எதுனா அட்ச்சி ஒடிக்காம இர்ந்தா தூக்கம் வராது போலக்கீது. "தினமலரு நூஸ்ல ஐயாவ பத்தி இன்னாத்து நைனா ராங்கா எய்தினே"ன்னு கடலூர்ல தினமலர் ஆபீஸை அட்ச்சி நொறுக்கிப்புட்டாங்களாம்.

நூஸ் பேப்பருன்னா ஆயிரம் எய்த தான் செய்வாங்கோ. இன்னிக்கு வாள்த்தி எய்துவாங்கோ நாளைக்கு தாக்கி எய்துவாங்கோ. எதுனா எய்திக்கின்னு போவட்டும் இர்ந்தா அவன் பெர்ய மன்ஸன். "இன்னாத்துக்குபா எய்துனே"ன்னு கேட்டு ராங்கு பண்ணா அவன இன்னான்னு சொல்றது.

அட்ச்சி நொறுக்கின ஆளுங்கோ கரீட்டா கம்பூட்டர் ரூம்ல பூந்து அட்ச்சி நொறுக்கினத பாத்தா இது நேத்து பேசி இன்னிக்கு அட்ச்ச மேரி தெர்லபா. படா சோக்கா பிளான் பண்ணி ரீஜன் கெட்ச்சப்போ வந்து சந்துல சிந்து பாடின மேரி கீது. ஆராருக்கு இன்னான்னா முன்பகையோ......

Monday, August 02, 2004

கடலை

இன்னாபா அல்லாரும் எப்டிக்கீறிங்கோ. ரொம்ப நாளா சின்னவூட்டை மட்டும் கவனிச்சிக்கிட்டு இர்ந்த குப்ஸாமி இப்போ பெர்ய வூடு பக்கமும் போய் வர ஆரம்பிச்சுட்டான்பா.

இன்னிக்கு கடல போடுறதுக்கு சொம்மா ரெண்டு மூணு டிப்ஸு பெர்ய வூட்டுல குட்த்துக்கீறேன். எப்டிக்கீதுன்னு பட்ச்சி சொல்லுங்கோ.