
நம்ம வூருல இன்னா விசேஷம் வந்தாலும் நடக்காத ஒரு கூத்து இந்தப் புள்ளையார் சதுர்த்தி வந்தா மட்டும் நடக்கும்ப்பா. வூருல ஒண்ணுத்துக்கும் ஒதவாம சுத்திக்கின்னு கீற பசங்கோ அல்லாரு வூட்டுலையும் துட்டு வசூல் பண்ணி புள்ளையாருக்கு செலை வைக்கிறது, அன்னிக்கு ஆடாத ஆடமெல்லாம் ஆடுறதை நா கணக்குலியே எட்த்துக்கல. ஆனா கட்டே கடேசியா புள்ளியார கொண்டுபோய் கடல்ல போடுவாங்கோ பாருங்கோ, அத்தான்பா மெய்யாலுமே கொடுமையான மேட்டரு.
கண்ட பெயிண்ட்டு, எதுனா ரசாயனமெல்லாம் கலந்து தான் அந்தப் புள்ளியார செய்றாங்கோ, அத்த கொணாந்து கடல்ல கலந்தா அது மன்ஸனுக்கு மீனுக்கு அல்லாம் எம்மாம் பெரச்சனைய கொணாந்து வுடும். ஆருமே அத்த பத்தி ரோசனப் பண்றது கெடியாது. வூர்வலமா சுத்தி வந்து புள்ளியார கடல்ல வீசிப்புட்டு அத்த ரெண்டு மிதியும் மிதிச்சிட்டு போவாங்கோ. குப்ஸாமி இதையெல்லாம் கேட்டாக்கா ஹிந்து இண்டாலரண்ஸ்ன்னு கூட ஆர்னா சொன்னாலும் சொல்லுவாங்கோ.
இந்த தபா நல்லவேளியா நம்ம வூரு கோர்ட்டுல இது ஸ்டே குட்த்துட்டாங்கோ. ஆரும் இந்த தபா ரசாயனம் கலந்த புள்ளியார் செலைய கடல்ல கலக்கக்கூடாதுன்னு. ஆனாலும் நம்ம காவி கச்சி சிஸ்யப்புள்ளிங்கோ அன்னிக்கு சுகுரா கொண்டுபோயி செலைய கடல்ல கலந்துவுடும். அப்பாலிக்கா பெரச்சனை தான்.
சரி, புள்ளியார கொண்டு போயி இன்னாத்து கடல்ல கலக்கணும். புள்ளியாரு ஒன்னாண்ட வந்து "எனுக்கு கலரு கலரா பெயிண்டு அட்ச்சி நீயும் கொஞ்சம் மூஞ்சில பெயிண்டு தேய்ச்ச்க்கின்னு டமுக்குடப்பா ஆட்டம் போட்டுக்கின்னு போயி என்னிய கடல்ல தூக்கிப்போடு"ன்னு கேட்டாரா? கெடியாதே. இதெல்லாம் நம்மளா செஞ்ச பளக்கம் தானே. ஈ எறும்புல்லாமும் பசி இல்லாம இர்க்கோணும்ன்னு வூட்டு வாசல்ல அரிசிமாவு கோலம் போட சொன்னாங்கோ. நம்மாளு அதுக்கு கலரு குடுக்கிறேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் கலந்து போட்டுக்கின்னு கீறாங்கோ. அத்த மேரி தண்ணில கீற உசுருங்களுக்கும் எதுனா குடுக்கணும்ன்னு அரிசிமாவுல புள்ளியாரு செஞ்சி அத்த கொண்டு போயி ஆறு, கொளம், குட்ட, கடலுன்னு எங்க தண்ணிய பாக்குறியோ அத்துல போடுன்னு வெச்சாங்கோ.
குப்ஸாமி வூட்டுல இன்னிய வரைக்கும் களிமண்ணாலையோ, கண்ட ரசாயனத்துலியோ புள்ளியாரு பொம்ம செஞ்சு தண்ணில வுட்டது கெடியாதுபா. எப்பவும் அரிசி மாவு தான். அதுவும் நம்ம ஆத்தா அந்தப் புள்ளியார செய்ய சொல்லோ "நம்மல்லாம் இன்னா கண்ணு புள்ளியாரு செய்றோம். அந்தக் காலத்துல மூணு குறுணி அரிசிய போட்டு புள்ளியாரு செய்வாங்களாம். அது தான் முக்குறுணி புள்ளியார்ன்னு பேரு வந்திச்சி"ன்னு சொல்லிக்கின்னே செய்யும். நம்ம கவுருமெண்ட்டு கூட களிமண்ணால செஞ்ச புள்ளியார தண்ணில தூக்கிப்போட ஒண்ணும் சொல்லல. ஆனா அத்த தூக்கிப்போட்டா தண்ணி இருக்குற எடம் துந்து பூடாதா? அரிசி செஞ்சத போட்டா அங்கே இருக்குற மீனுக்கு நல்லது. களிமண்ணையும் ரசாயனத்தையும் போட்டா அல்லாருக்கும் கெடுதல் தான்பா.
சரி, இப்போ இன்னாதுக்கு இப்டி கூவிக்கின்னு கீற குப்ஸாமின்னு கேக்காதிங்கோ. இத்த படிக்கிற பத்து பேருல ரெண்டு பேராவது களிமண்ணு புள்ளியாரு, ரசாயன பொம்ம புள்ளியாருன்னு போவாம வூட்டுலியே அரிசியிலே செஞ்சு அத்த கொண்டு போயி தண்ணியிலே தூக்கிப்போடுவிங்கன்னு நென்ச்சி தான் சொல்றேன். அல்லாரும் சந்தோசமா புள்ளியாரு சதுர்த்தி கொண்டாடுங்கபா. வர்ட்டா....