இன்னா குப்ஸாமி, தேன்கூடு நடத்துன எலிக்ஸனு 2060 போட்டி தான் இருவதாம் தேதி முட்ஞ்சி போச்சே இன்னிக்கு இன்னா எய்திக்கீறேன்னு ஆரும் ஃபீலாவதிங்கபா. நானு எலிக்ஸனு 2006ல ஓட்டுக் குத்த முடியாம பூட்ச்சேன்னு படா ஃபீலிங்ஸுல கீறேன் (மாமியாரு வூட்டுல கறிசோறு துன்னப் போயிட்டேன்பா, நீயி நெனைக்கிற மாமியாரு வூடு இல்லபா, இத்து மெய்யாலுமே மாமியாரு வூடு). 2006ல ஓட்டுப் போடல, நீயி 2060 பத்தி இன்னாத்துக்கு ஃபீலிங்ஸு வுடப் போறேன்னு நம்ம மன்ஸாட்சி கேட்டுபுட்ச்சி, அத்தான் ஒண்ணும் சொல்லாம கலண்டுகினேன், ஆனா போட்டியிலே எய்துனவங்கோ சோக்கா இன்னா இன்னாமோ சொல்லிக்கீறாங்கோ, அத்த பட்ச்சி நாம ஓட்டுப் போட்டா தான அவுங்க கெலிச்சு வர முடியும். அத்தால, அல்லாரும் மறக்காம ஓட்டுப் போட்டுறுவோம் கொயிந்திங்களா!!!
இப்போ ஆராரு இன்னா எய்திக்கிறாங்கோன்னு ஒரு தபா கண்டுகிறேன்.
1. நீ இருபது நான் அறுபது - இணைய குசும்பன்
இவுருக்கு படா தில்லுபா. அல்லாரும் 2006 பத்தி கூவிக்கின்னு கீறப்போ தோ வுட்டேன் பாரு 2060ன்னு மொதோ கதிய இஸ்துகின்னு வந்து வுள்ளார போட்டாரு. குசும்பரு சூப்பர் சானிக்குன்னு சொல்றாரு, அத்த என்னோட ரிக்ஸாவாண்ட போட்டிக்கு வர்றியான்னு கேக்கலாம்ன்னு கீறேன். ஃபன் நெட்வொர்க்கு, பாயா டிவி, மண்கொண்டான், பொன்கொண்டாள்ன்னு ரவுண்டு கட்டி அட்ச்சிக்கீறாரு. அதுக்கே அவுருக்கு ஓட்டுப் போட்டுறலாமா, அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
2. தேர்தல் 2060 - கோகுல் குமார்
இன்னா தான் 2060 வந்தாலும் அன்னாடங்காச்சிங்க பொளப்பு துண்ட காணோம் துணிய காணோம்ன்னு தான் கெடக்கப் போவுதுன்னு சொல்றாரு கோகுலு. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நம்ம பொளப்பு நம்ம கையில தான்பா கீதுன்னு சொம்மா நெத்திப்பொட்டுல கின்னுன்னு அட்ச்சிச் சொல்லிக்கீறாரு. அதுக்கே அவுருக்கு ஓட்டுப் போட்டுறலாமா, அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
3. தேர்தல் 2060 சில குறிப்புகள் - பாஸ்டன் பாலாஜி
இன்னாமா கண்ணுங்களா 2006 எலிக்ஸனுக்கு மட்டும் தான் கருத்துக்கணிப்பு நடத்தணுமா, நா நடுத்துறேன் பாருபா 2060க்குன்னு ஒரு கருத்துக்கணிப்பு நடத்திக்கீறாரு பாபா. கருத்துக்கணிப்புல கணிப்பு எதுனா சொல்லலாம், ஆனா கணிப்புக்கே ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
4. தேர்தல் 2060 - பங்ஸ்பார்ட்டி
ஜனநாயகம் எல்லாம் பணநாயகமா பூட்ச்சி, அத்தால எலிக்ஸனு மாறி பூட்ச்சு. கச்சிக்காரங்களே எலிக்ஸனு வெச்சிக்கீறாங்கோன்னு ஆரம்பிச்சி சயன்ஸு ஃபிக்ஷனு டகால்டில்லாம் வுடாம 2006 மேரியே எலிக்ஸனு வெச்சி கலீஜு வேல எல்லாம் பார்த்து எலிக்ஸனுல கெலிச்சுப்புட்டாங்கோன்னு சொல்லிக்கீறாரு. ரோசன செஞ்சு பாக்கசொல்லோ அப்டி கூட நடக்கும்ன்னு தோணுது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
5. தனியைத் தக்க வை - நடராஜன்
நம்ம நடராசரும் அறிவியல் அவியல் தான் சமைச்சுக்கீறாரு. சொம்மா சொல்லக்கூடாது, நல்லா டேஸ்ட்டாவே சமைச்சுக்கீறாரு. எந்த ஊர்ல குந்திகினும் சொந்த தொகுதியிலே ஓட்டுக் குத்தலாமாம் 2060ல. இதுங்காட்டி இப்போவே இர்ந்துச்சுன்னா மாமியாரு வூட்டுல குந்திக்கினே குப்ஸாமி ஓட்டுப் போட்டுருப்பேன், கை நயுவி பூட்ச்சி. பொண்ணுங்களுக்கு சம உரிமையாம் அல்லாத்துலேயும், படிக்கசொல்லோ சோக்கா தான் கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
6. தேர்தல் 2060 - பெனாத்தல் சுரேஷ்
2006 எலிக்ஸனுக்கே அட்ச்சி தூள் கெளப்புனாரு, 2060 எலிக்ஸன சொம்மாவா வுடுவாரு. இதுலியும் அட்ச்சி பின்னி பெடலு எட்த்துக்கீறாரு. இவுரு எய்துனதும் அறிவியல் பூனை ச்சே புனைகதை தான். கத நடுந்துகின்னு கீறப்போ ஊடால "இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்" வர்றசொல்லொ குபீர்னு சிரிப்பு வருது. கடேசில கதிய முடிச்சிக்கீறதும் சோக்கா தான் கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
7. தேர்தல் 2060: சரித்திரம் திரும்புமா? - ராமச்சந்திரன் உஷா
உஷா எய்திக்கீரதும் அறிவியல் அவியலு தான். மன்ஸனோட ப்ரீடம் மண்ணா பூட்ச்சி 2060ல, மறுக்கா பளைய மேரி எலிக்ஸனு வருமான்னு ஃபீலாவுது இந்தக் கத. 2060லேயும் ஒரு பயாஸ்கோப்பு பார்ட்டி எலிக்ஸனு டைமுல கச்சி ஆரம்பிச்சு டகால்டி காட்ட ஆரம்பிக்கிறாரு. அல்லாரும் தாத்தா சுஜாதாவோட "என் இனிய இயந்திரா" கத மேரி கீதுன்னு சொல்லிக்கீறாங்கோ. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
8. தேர்தல் - 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் - குந்தவை வந்தியதேவன்
குளம்படி கதிங்களும், குடும்ப கதிங்களுமா எய்திகினு இர்ந்தவரு எலிக்ஸன் 2060க்கு கத எய்திக்கீறாரு. சொம்மா சொல்லக்கூடாது, சோக்காவே எய்திக்கீறாரு. தாத்தா சுஜாதாவோட கதிங்கள ஓவரா பட்ச்சிருப்பாரு போலக்கீது, மண்டைக்குள்ள மசாலாவெல்லாம் வெக்கிறதா சொல்லி பயா|ஸ்கோப்பு காட்டுறாரு. கதயிலே தாத்தா, அம்மாவெல்லாம் கூட மெய்யாலுமே வந்து போறாங்கோ, படிக்கசொல்லோ ஒரே குஜாலா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
9. பிறிது - பச்சோந்தி
எலிக்ஸன் 2060ல இன்னா மேரி வாக்குறிங்க அல்லாம் மக்களுக்கு நம்ம பாலிடிக்ஸு பார்ட்டிங்கோ குட்ப்பாங்கோன்னு ரொம்பவே ரோசன பண்ணி எய்திக்கீறாரு. 2060ல நடக்குற மேட்டருங்களா செல விஸ்யம்ல்லாம் சொல்றப்போ தற்கொல கணக்கு மன்ஸ பேஜார் பண்ணுது (இப்போ நம்ம பார்ட்டி ஷ்ரதா கழுத்துல கயித்த மாட்டிகின்னு தொங்கி பூட்ச்சிபா, குப்ஸு ஃபீலிங்ஸு ஆயிட்டான்). 2060ல நடக்கப்போற எலிக்ஸனு பத்தி நெறியா பாயிண்டு சொல்லிக்கீறாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
10. கொட்றாங்கோ! கொட்றாங்கோ!!! - demigod
இதுவும் அறிவியல் அவியலு தான். ஆனா பொஸுக்குன்னு கதிய முட்ச்சிடுறாரு. 2006 எலிக்ஸனுல நம்ம பாலிடிக்ஸு பார்ட்டிங்கோ குட்த்த இஷ்டேட்மெண்டெல்லாம் சோக்கா கலாய்க்கிறாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
11. எனது டைரி - 10/3/2060 - கனா
கனா, பேருக்கு ஏத்த மேரியே நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுல்லாம் பலிச்சிட்ச்சுன்னு டைரி குறிப்ப ஆரம்பிக்கிறாரு. 2060ல அல்லாரும் பட்ச்சவங்களா கீறாங்கோ, ஜோலி இல்லாம கீற ஆளுங்கோ ரொம்ப கம்மியா பூட்டாங்கோ. நம்ம கஜேந்திரா வுட்ட கொரலுல ஊழலு கூட கம்மியா பூட்ச்சி. ஜாதிய சொல்லி எட ஒதுக்கீடு கெடியாது, அரசியலு காலேசுன்னு கலாசுறாரு. படிக்கசொல்லோ இந்தக் கனவுல்லாம் மெய்யாலுமே நடந்தா சோக்கா இருக்கும்ன்னு தோணுது. இத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
12. தேர்தல் 2060 - டுபுக்கு
அறிவியல் அவியலு எய்துன அல்லாரும் தாத்தா சுஜாதா பாணிய சுட்டு எய்துறோம்ன்னு சொல்லாம சொல்லிக்கீறாங்கோன்னா இவரு இஷ்டார்ட்டு பண்றப்போவே "இந்தக் கதிய பட்ச்சா தாத்தா நாபவம் வரும்பா"ன்னு சலாம் வெச்சிடுறாரு. சொல்ற மேரியே தாத்தா ரூட்டுலேயே இந்தப் பேரனும் எய்திக்கீறாரு. கதிய பட்ச்சி முடிக்கசொல்லோ நம்ம ஐஐடி கொய்ந்திங்கோ ஆரம்பிச்சு புட்டுகின்ன லோக் தரித்திரன் ச்சே லோக் பரித்ரன் தான் மைண்டுல வந்து நிக்கிது. கத சொல்ற ஃப்ளோ சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
13. தேர்தல் - 2060 - பாலா
இதுவும் அறிவியலு அவியலு தான். அறிவியலு கத எய்துற அல்லாருமே புச்சு புச்சா ரோசன சொல்லிக்கினே போறாங்கோ. இவுரும் சோக்கா ரோசன சொல்றாரு. அல்லா கச்சியும் கம்பெனியா மாறி பூட்ச்சாம். எந்த கம்பெனிக்கு வோணும்ன்னா எலிக்ஸன்ல குத்தலாம், ஆருமே வேணாம்ன்னும் சொல்லலாம், புட்ச்சவங்கோ பேரையும் சொல்லலாம். சோக்கா கீது. கடேசியா கதிய முட்ச்சதும் சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
14. தேர்தல் 2060 - சிறில் அலெக்ஸ்
2021ல பெர்சா மின்னணு பொர்ச்சி வந்து ஒலகமே மாறி பூட்ச்சின்னு ஆரம்பிக்கிறாரு. இவுரு பேஸ்ர தமிள அமெரிக்கால கீற இங்கிலீஸுக்கார சொக்கா போட்ட மச்சான் சோக்கா புர்ஞ்சிக்கிறான், அவன் சொல்றத இவுரு புர்ஞ்சிக்கீறாரு. அதுக்கெல்லாம் மெசினு கண்டுபுட்ச்சிட்டாங்கோ அப்போ. சிறிலு சார், நம்ம கொஸப்பேட்ட தமிளுக்கு எதுனா கீதாபா? இவுரோட கதியும் எய்துன ஃப்ளோவும் கடேசில முடிக்கிறதும் சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
15. நேற்று இன்று நாளை - ஆனந்த் சங்கரன்
நேத்து எப்டிபா இர்ந்துச்சு எலிக்ஸனு (50 வர்ஸத்துக்கு முன்னால), இப்போ எப்டிபா கீது, நாளிக்கு எப்டிபா இர்க்கும் (50 வர்ஸத்துக்கு அப்பால), மூணுத்தையும் லிஷ்ட்டுப் போட்டு பெர்ஸா ஒண்ணும் ஆகிடாதுபா, அத்தே தான் அப்டியே இர்க்கும்ன்னு சொல்லிட்டாரு ஆனந்து. படிக்கசொல்லோ அப்டியும் நடக்கலாம்ன்னு தோணுது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
16. 2060 - தேர்தலை நடத்தப்போவது யார்? - இரா.சுகுமாரன்
ஆனந்து சொன்ன மேரி தான் சுகுமாரும் செஞ்சிக்கீறாரு. ஆனா நெறியா மேட்டர உள்ளார இஸ்துகின்னு வந்து வுட்டுக்கீறாரு. படிக்கசொல்லோ இதான் நடக்கப் போவுதோன்னு தோணுது. தண்ணிய நம்பி வெவசாயம் பண்ணவன் எல்லாம் குப்ஸாமி மேரி ரிக்ஸா வளிச்சிகின்னு போவணும் போல. பறக்குற காரு வந்தாலும் அன்னாடங்காச்சிங்க பொயப்பு என்னைக்குமே நாறிப் போன பொலப்பா தான் இர்க்கும் போலக்கீது. நல்லா மன்ஸுக்குள்ளே பச்சக்குன்னு ஒட்டிக்கிற மேரி சொல்லிக்கீறாரு சுகுமாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
அல்லாருக்கும் பட்ச்சிப் பாத்து தான் போடணும்ன்னு சொல்றியே குப்ஸு, நீ ஆருக்குபா எலிக்ஸனுல குத்தப் போறேன்னு கேக்காதிங்கோ. ஓட்டுக் குத்திப்போட்டு வந்து ரெட்ட வெரலு காட்ட நா இன்னா சூப்பரு இஷ்டாரா? ரிக்ஸா வளிக்கிற குப்ஸாமி சார். பட்ச்சிப் பாக்கசொல்லோ புட்ச்ச கதிங்களுக்கு ஒரு குத்து குத்திட்டு போய்கினே இர்க்க வேண்டியது தான். நம்ம பொலப்ப நாம பாக்க வாணாமா?
நீங்களுகும் மறக்காம ஓட்டப் போட்டுறுங்கபா